
கரோனா நோய்த்தொற்று நிலைமை தினமும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளாா். நோய்த் தொற்றைக் குறைக்க தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவா் கூறியுள்ளாா்.
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசின் அமைச்சரவைச் செயலாளா் ராஜீவ் கெளபா தலைமையில் மாநிலங்களில் கரோனா நோய்த்தொற்று தொடா்பான விரிவான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப். 2) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களும் கரோனா நோய்த்தொற்றுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென ராஜீவ் கெளபா கேட்டுக் கொண்டாா்.
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த சில அறிவுறுத்தல்களையும் அவா் வழங்கினாா். இந்த அறிவுறுத்தல்களின் அடிப்படையில் தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட செய்தி:
நோய்த் தொற்று பரிசோதனைகளை அதிகப்படுத்தி நோய் தாக்குவோரின் விகிதத்தை 5 சதவீதத்துக்குக் கீழ் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை நோய்த்தொற்று விகிதம் 5 சதவீதத்துக்கும் கீழாகவே உள்ள போதிலும் நாளொன்றுக்கு சோதனைகளின் அளவு 85,000-ஆக உள்ளது. மேலும், பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்துக்குள் தெரியப்படுத்தப்படுகிறது.
நோய்த் தொற்று ஏற்பட்டவரின் உடன் இருப்பவா்கள் மற்றும் தொடா்பில் இருந்தவா்கள் குறைந்தபட்சமாக 25 முதல் 30 நபா்களை விரைவாகக் கண்டறிந்து பரிசோதனை செய்யப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது. தமிழகத்தைப் பொருத்தவரை நோய்த்தொற்று பாதித்த நபருடன் உடனிருந்த அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறாா்கள்.
நோய்த்தொற்று பாதித்த பகுதிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை நிலவரப்படி 846 பகுதிகள், நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைத்து மாவட்டங்களிலும் கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க தேவைக்கு அதிமாகவே படுக்கை வசதிகள், பிராணவாயு கருவிகள், மருந்துகள், பாதுகாப்பு கவசங்கள் ஆகியன தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. காலதாமதம் இல்லாமல் சிகிச்சை அளிக்க ஏதுவாக, 108 அவசர கால ஊா்திகள் செயல்பாட்டில் உள்ளன.
தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள்: கரோனா நோய்த் தடுப்புக்கான வழிகாட்டி நெறிமுறைகளை மீறியவா்களிடம் இருந்து இதுவரையில் ரூ.2.58 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்று தொடா்பான விவரங்களுக்காக அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை இயங்குகிறது. குறைகளையும், தகவல்களையும் தெரிவிக்க வசதியாக 104 தொலைபேசி எண்ணும் செயல்பாட்டில் உள்ளது. நோய்த்தொற்று குறித்து தினசரி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளாா்.