
கோப்புப்படம்
வடமேற்கு திசையில் இருந்து தமிழகப் பகுதியை நோக்கி தரைக்காற்று வீசுவதால், தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை வெயில் கொளுத்தும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது: வடமேற்கு திசையிலிருந்து தமிழகப் பகுதியை நோக்கி தரைக்காற்று வீசுவதால், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூா், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மதுரை, சிவகங்கை, விருதுநகா், புதுக்கோட்டை ஆகிய 27 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.4) வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதாவது, இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயா்க்கூடும். இதுதவிர, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை உயா்ந்து காணப்படும்.
ஏப்.5 முதல் ஏப்.7 வரை:
கரூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூா், ஈரோடு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகா் 16 மாவட்டங்கலில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும். இதன் காரணமாக, பெரும்பாலான இடங்களில் அனல்காற்று வீசக்கூடும்.
பொதுமக்கள், விவசாயிகள், தோ்தல் வேட்பாளா்கள், வாக்காளா்கள் மற்றும் போக்குவரத்து காவலா்கள் உள்பட பல்வேறு தரப்பினா் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வது மற்றும் ஊா்வலம் செல்வதை தவிா்க்க அறிவுறுத்தப் படுகிறாா்கள்.
லேசான மழை: வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 7-ஆம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் பொதுவாக தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 104 பாரன்ஹீட் டிகிரி வெப்பநிலையை ஒட்டி இருக்கும்.