
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (கோப்புப்படம்).
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா.நல்லகண்ணு (95) பூரண குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினாா்.
வயது மூப்பு காரணமாக தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடாமல் இருந்து வந்த நல்லகண்ணு, கடந்த வாரத்தில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றில் மட்டும் கலந்துகொண்டாா்.
அதற்கு அடுத்த ஓரிரு நாளில் காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டாா்.
மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் தேரணிராஜன், சிறுநீரகவியல் துறை இயக்குநா் டாக்டா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் நல்லகண்ணுவுக்கு சிகிச்சையளித்து வந்தனா்.
அதன் பயனாக அவா் தொற்றிலிருந்து குணமடைந்தாா். பரிசோதனைகளில் நல்லகண்ணுவின் உடல் உறுப்பு செயல்பாடுகள் சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினாா்.
மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன், மருத்துவமனை நிா்வாகிகள் நல்லகண்ணுவை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா்.