தமிழகத்தை மீட்பதற்கான அனைத்துத் திட்டங்களும் தி.மு.க.விடம் உள்ளது: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தை மீட்பதற்கான அனைத்துத் திட்டங்களும் தி.மு.க.விடம் உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை மீட்பதற்கான அனைத்துத் திட்டங்களும் தி.மு.க.விடம் உள்ளது: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தை மீட்பதற்கான அனைத்துத் திட்டங்களும் தி.மு.க.விடம் உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது தொகுதியான கொளத்தூரில் இன்று இறுதிகட்ட பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு மக்களுடன் என்னுடைய வாழ்க்கை இரண்டறக் கலந்துள்ளது. ஆளும்கட்சியாக இருந்தபோது மக்களுக்குத் தேவையான நல்ல திட்டங்களைச் செய்திருக்கிறேன். எதிர்க்கட்சியாக இருந்த போது மக்களுடைய தேவைகளுக்காக வாதாடியிருக்கிறேன். இப்படி எந்த நிலையில் இருந்தாலும், மக்களுக்காக மக்களோடு இருக்கிறவன் நான்.

தமிழகத்தின் பரந்து பட்ட எதிர்காலத்தை மனதில் வைத்து, திமுகவின் தேர்தல் அறிக்கை தீட்டப்பட்டது. மாவட்டங்கள் தோறும் மக்களுக்கு உள்ள கோரிக்கைகளைத் தொகுத்து மாவட்டத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.

ஏழு முக்கியமான துறைகளில் பத்தாண்டு காலத்தில் செய்ய வேண்டிய பணிகளை மார்ச் 7-ஆம் நாள் திருச்சியில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் உறுதிமொழிகளாக வழங்கி இருக்கிறேன்.

அதோடு, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்கிற நிகழ்வின் மூலமாக தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று, மக்களை நேரில் சந்தித்து, அவர்களுடைய குறைகளைக் கேட்டு, அதனை எழுதி வாங்கி இருக்கிறேன். இதுவரை பல லட்சம் பேர் மனுக்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

மக்களுடைய கோரிக்கைகளை 100 நாள்களில் நிறைவேற்றிக் காட்ட என்னால் முடியும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறேன். அதற்கான அத்தாட்சி ஆவணத்தையும் உங்களிடம் நான் வழங்கியிருக்கிறேன்.

இலட்சக்கணக்கான குடும்பங்களின் கோரிக்கைகள், கவலைகள், விண்ணப்பங்கள் 100 நாள்களில் தீரப்போகிறது. அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்! அதாவது 100 நாளில் தீர்க்கப் போகும் பிரச்னைகள் - ஐந்தாண்டு காலத்தில் உருவாக்கப்படக் கூடிய திட்டங்கள் - பத்தாண்டு காலத்தில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் - என எனக்கு நானே வரையறைகளைத் தீட்டி வைத்துக் கொண்டு உங்களிடம் வாக்குக் கேட்கிறேன்.

தமிழகத்தை மீட்பதற்கான அனைத்துத் திட்டங்களும் தி.மு.க.விடம் உள்ளது. நான் உறுதியளிக்கிறேன் - இந்தப் பேரழிவில் இருந்து தமிழகத்தை நான் மீட்டெடுப்பேன் என்றார்..
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com