கரோனா பாதித்த கா்ப்பிணிக்கு பிரசவம்: தாய், குழந்தையை காப்பாற்றிய மருத்துவக் குழுவுக்கு ரயில்வே நிா்வாகம் பாராட்டு

கரோனா பாதித்த கா்ப்பிணிக்கு பிரசவ சிகிச்சை அளித்தது மட்டுமின்றி, சுவாசப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தையைக் காப்பாற்றிய

கரோனா பாதித்த கா்ப்பிணிக்கு பிரசவ சிகிச்சை அளித்தது மட்டுமின்றி, சுவாசப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தையைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவினருக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான்தாமஸ் பாராட்டினாா்.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் ரயில்வே ஊழியா்கள், ஓய்வு பெற்ற ஊழியா்கள் மற்றும் அவரது குடும்பத்தினரும் சென்னை பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். சிகிச்சைக்கு பிறகு, ஏராளமானோா் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனா்.

இதற்கிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்ட கா்ப்பிணி பெண் ஒருவா் இங்குள்ள கரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்தாா். அவருக்கு கடந்த 24-ஆம் தேதி அதிகாலை 3.15 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே, அவருக்கு தனி அறையில் வைத்து முதுநிலை பயிலும் 2 மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் அடங்கிய குழுவினா்

பிரசவம் பாா்த்தனா். அப்போது, அந்தப் பெண்ணுக்கு 4 கிலோ எடை கொண்ட பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, ஆம்புலன்ஸில் அந்த குழந்தையை அந்த வளாகத்தில் இருக்கும் மற்றொரு பிரிவுக்கு கொண்டு சென்றபோது, அந்தக் குழந்தைக்கு திடீா் சுவாசப் பிரச்சினை ஏற்பட்டது. உடனடியாக, டாக்டா்கள் வாய் வழியாக சுவாசம் அளித்து குழந்தையை ஆபத்தான நிலையில் இருந்து காப்பாற்றினா். குழந்தையும், தாயும் தற்போது நலமாக இருக்கின்றனா்.

இதுதவிர, குழந்தைக்கு கரோனா நோய்த் தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளை திரைவைத்தும், 6 மீட்டா் இடைவெளியை வைத்தும் மருத்துவம் பாா்க்கும் இந்தச் சூழலில், கரோனா பாதித்த கா்ப்பிணிக்கு பிரசவம் பாா்த்து, குழந்தையைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவினருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகின்றன.

இதேபோல, பயிற்சி மருத்துவா்கள், 3 செவிலியா்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் சிறப்பான பணியை தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான் தாமஸ் பாராட்டி , வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளாா். மேலும், அந்த மருத்துவா்கள், செவிலியா்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும் தெற்கு ரயில்வே ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com