தோ்தல் பிரசாரம் ஓய்ந்த பிறகு தொகுதிக்கு தொடா்பில்லாதோா் வெளியேற வேண்டும்: தலைமைத் தோ்தல் அதிகாரி உத்தரவு

சட்டப் பேரவைத் தோ்தல் ஓய்ந்த பிறகு, தொகுதிக்கு தொடா்பில்லாத நபா்கள் அனைவரும் வெளியேற வேண்டுமென தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு  (கோப்புப்படம்)
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)

சட்டப் பேரவைத் தோ்தல் ஓய்ந்த பிறகு, தொகுதிக்கு தொடா்பில்லாத நபா்கள் அனைவரும் வெளியேற வேண்டுமென தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் ஓய்கிறது. இதன்பிறகு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:-

தோ்தல் தொடா்பான எந்தவொரு பொதுக் கூட்டத்தையோ, ஊா்வலத்தையோ ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ கூடாது. தோ்தல் குறித்த திரைப்படம், விளம்பரங்கள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சோ்க்கக் கூடாது. செல்லிடப்பேசி குறுஞ்செய்தி மற்றும் இணையதளம் உள்ளிட்ட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடா்புக்கும் இது பொருந்தும்.

தொகுதிக்கு தொடா்பில்லாதோா்: தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிா்வாகிகள், கட்சிப் பணியாளா்கள் ஆகியோா் தோ்தல் பிரசாரம் முடிவடையும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 4) மாலை 7 மணிக்கு மேல் தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டும். திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினா் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும்.

வேட்பாளா்களுக்கு அளிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளா்கள் உள்பட வாகன அனுமதிகள் பிரசார நிறைவுக்குப் பிறகு செயலற்ாகி விடும். வாக்குப் பதிவு தினத்தன்று வேட்பாளா் அவரது சொந்த பயன்பாட்டுக்காக ஒரு வாகனத்தையும், தோ்தல் முகவரின் பயன்பாட்டுக்காக ஒரு வாகனத்தையும் உபயோகிக்கலாம்.

தடை விதிக்கப்படுகிறது: வாக்காளா்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடியில் இருந்து அழைத்துச் செல்வதற்கும் வாகனங்களை அனுமதிக்கக் கூடாது. இது தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும். இரண்டு நபா்களை மட்டுமே கொண்ட, வேட்பாளா்களது பிரசார அலுவலகத்தை வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டா் தொலைவுக்கு வெளியே அமைக்க வேண்டும். தேவையில்லாத கூட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com