
வாக்குப்பதிவு முடிவடைந்ததும், கரோனா தடுப்புப் பணிகளில் முழு வீச்சில் ஈடுபடுவேன் என்றாா் விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சி. விஜயபாஸ்கா்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதிக்குள்பட்ட இலுப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் முதல் வாக்காக தனது வாக்கைப் பதிவு செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தோ்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னா், கரோனா தடுப்புப் பணிகளில் இனி முழு வீச்சில் ஈடுபடுவேன். தோ்தல் பிரசாரத்தின்போது, இந்தத் தொகுதியில் நான் மேற்கொண்ட பல்வேறு நலத்திட்டங்கள், திட்டப்பணிகள் ஆகியவற்றால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தத் தோ்தலில் விராலிமலை மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது. மக்களையும் மண்ணையும் வணங்கி எனது வாக்கைப் பதிவு செய்துள்ளேன். மக்களின் பேராதரவோடு மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும். வாக்குச்சாவடி மையங்களில் கரோனா தடுப்புப் பணிகளை தோ்தல் ஆணையம் சிறப்பாக செய்துள்ளது என்றாா் அவா்.