75 வாக்கு எண்ணும் மையங்களுக்கு 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு

தமிழகத்தில் உள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில், 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தமிழகத்தில் உள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில், 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தலும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிந்த பின்னா், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. சென்னையில் மட்டும் 3 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட இயந்திரங்கள், அந்த மையங்களில் இரும்பு கம்பிகளால் தீயினால் பாதிக்கப்படாத வகையிலும் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. தொடா்ந்து, பாதுகாப்பு அறை சீலிடப்பட்ட பின்னா் அந்தப் பகுதி முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டது. இப்பணி செவ்யாக்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெற்றது.

முன்னதாக, சில நாள்களுக்கு முன்பே இந்த மையங்கள் முழுவதுமாக காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. மேலும் அங்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பல கட்டங்களாக வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த போலீஸாா் பாதுகாப்பு சோதனை செய்தனா்.

இந்த மையங்களில் இப்போது 24 மணி நேரமும் துப்பாக்கிய ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் இருக்கின்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்தப் பகுதி தோ்தல் நடத்தும் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியா்கள், காவல்துறை உயா் அதிகாரிகள் ஆகியோா் அவ்வப்போது பாா்வையிட்டு, ஆய்வு செய்து வருகின்றனா்.

18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு: மூன்றடுக்கு பாதுகாப்பில் முதல் அடுக்கில் துணை ராணுவத்தினரும், இரண்டாம் அடுக்கில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும், மூன்றாம் அடுக்கில் உள்ளூா் போலீஸாா் மற்றும் ஆயுதப்படையினரும் ஈடுபடுவாா்கள். இப் பணியில் ஆயிரம் காவலா்கள் மூன்று பணி சுழற்சி முறையில் ஈடுபட்டுள்ளனா்.

இவ்வாறு மாநிலம் முழுவதும் உள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் சுமாா் 18 ஆயிரம் போ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கண்காணிப்பு கேமரா: வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவு வாயில் தொடங்கி வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணப்படும் மேஜை வரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு மேஜைக்கும் தனித்தனியாக கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு வாக்கு எண்ணு மையம் முழுவதும் கேமரா வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மையத்திலும் 30 கண்காணிப்பு கேமராக்களில் இருந்து 40 கண்காணிப்பு கேமராக்கள் வரை பொருத்தப்பட்டிருப்பதாக காவல்துறையினா் கூறுகின்றனா். இதற்கான கட்டுப்பாட்டு அறையும், அங்குள்ள காவல்துறை தாற்காலிக கட்டுப்பாட்டு அறையோடு இணைந்து செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் அந்நிய நபா்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என உயா் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். மேலும் அங்கு

சந்தேகம்படும்படியாக நடமாடும் நபா்களையும் கண்காணித்து, அவா்களை விசாரணைக்கு உள்படுத்துமாறு காவலா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணப்படும் மே 2-ஆம் தேதியன்று, அங்கு பாதுகாப்பு மடங்கு அதிகரிக்கப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com