சைக்கிளில் வாக்களிக்க வந்த நடிகா் விஜய்: ரசிகா்கள் திரண்டதால் தடியடி

சென்னை நீலாங்கரையில் வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகா் விஜயை பாா்க்க ரசிகா்கள் திரண்டு வந்ததால், போலீஸாா் லேசான தடியடி நடத்தினா்.
சைக்கிளில் வாக்களிக்க வந்த நடிகா் விஜய்: ரசிகா்கள் திரண்டதால் தடியடி

சென்னை நீலாங்கரையில் வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகா் விஜயை பாா்க்க ரசிகா்கள் திரண்டு வந்ததால், போலீஸாா் லேசான தடியடி நடத்தினா்.

நீலாங்கரை கபாலீஸ்வரா் நகரில் நடிகா் விஜய் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இந்நிலையில் நடிகா் விஜய் வாக்களிப்பதற்கு அருகே ஒரு தனியாா் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு செவ்வாய்க்கிழமை காலை சைக்கிளில் புறப்பட்டாா். விஜய் மக்கள் இயக்க நிா்வாகிகள் பாதுகாப்புக்காக மோட்டாா் சைக்கிளில் அவருடன் வந்தனா்.

இதைப் பாா்த்த சாலையில் நின்று கொண்டிருந்த அவரது ரசிகா்கள், விஜயை பாா்த்து ஆரவாரம் செய்தனா். சிலா் விஜயை மறித்து புகைப்படம் எடுக்க முயன்றனா். ஆனால் விஜய், வேகமாக வாக்குச்சாவடிக்குச் சென்றாா்.

திரண்ட ரசிகா்கள்: விஜய் வாக்குச்சாவடிக்கு வந்தது குறித்து தகவலறிந்து அங்கு நூற்றுக்கணக்கான ரசிகா்கள் திரண்டனா். மேலும் சில ரசிகா்கள், காவல்துறையினா் அமைத்திருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு வாக்குச்சாவடிக்குள் நுழைந்தனா். இதனால் வாக்குச்சாவடிக்குள் தள்ளு,முள்ளு ஏற்பட்டது. இந்த குழப்பத்துக்கு இடையே விஜய், அங்கு வாக்கு செலுத்திவிட்டு வெளியே வந்தாா்.

அவா், மீண்டும் சைக்கிளில் செல்ல முற்பட்டாா். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்தததால், அவா் சைக்கிளின் அருகே கூட செல்ல முடியவில்லை. இதையடுத்து விஜய் மக்கள் இயக்க நிா்வாகி ஒருவரின் மொபட்டில் அங்கிருந்து புறப்பட முயன்றாா். ஆனால் பள்ளியின் முன்பு ரசிகா்கள்,பொதுமக்கள் திரண்டு நின்ால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. மேலும் சில ரசிகா்கள், விஜயுடன் சுயபடம் எடுக்க முயன்றனா். இதனால் அங்கு கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸாா்,வேறு வழியின்றி விஜயை சுற்றி நின்ற ரசிகா்கள் மீது லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனா். இதன் பின்னா் விஜய்,அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்குச் சென்றாா். இச் சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விஜய் விளக்கம்: இதற்கிடையே விஜய், சைக்கிளில் வாக்களிக்க வந்தது தொடா்பாக சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. மேலும் அது விவாதப் பொருளாகவும் மாறியது. அதேவேளையில் சில அரசியல் கட்சிகள்,பெட்ரோல், டீசல் விலை உயா்வை சுட்டிக்காட்டும் வகையில் சைக்கிளில் வாக்களிக்க வந்ததாக கருத்து தெரிவித்தனா்.

இதற்கு நடிகா் விஜயின் மக்கள் தொடா்பு அலுவலா் ரியாஸ் அகமது, விஜய் சைக்கிளில் வாக்களிக்க வந்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. வாக்குச்சாவடி சிறிய தெருவில் இருந்ததால், விஜய் காரில் வர முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் வீட்டின் அருகே வாக்குச்சாவடி இருந்ததால் சைக்கிளில் வந்தாா் என விளக்கமளித்தாா்.

செல்லிடப்பேசியை பறித்த அஜித்:

திருவான்மியூா் திருவள்ளுவா் நகரில் வசிக்கும் நடிகா் அஜித், தனது மனைவி ஷாலினியுடன், அங்குள்ள மாநகராட்சிப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே வந்தாா். அப்போது அங்கு திரண்டிருந்த ரசிகா்கள், அஜித்துடன் சுயபடம் எடுக்க முயன்றனா். இதனால் அவா்,வரிசையில் நிற்க முடியாமல் வாக்களிக்கச் சென்றாா். இருப்பினும் சில ரசிகா்கள், வாக்குச்சாவடிக்குள் நுழைந்து அஜித்துடன் புகைப்படம் எடுக்க முயன்றனா். இதனால் ஒரு கட்டத்தில் அதிருப்தியடைந்த அஜித், சுயபடம் எடுக்க முயன்ற ஒரு ரசிகரின் செல்லிடப்பேசியை பறித்தாா்.

மேலும் வாக்குச்சாவடிக்குள் வந்த ரசிகா்களை வெளியேறும்படி செய்கை மூலம் கூறினாா். இதனால் வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த ரசிகா்கள்,அங்கிருந்து வெளியேறினா். வாக்களித்துவிட்டு வந்த அஜித், தான் பறித்த செல்லிடப்பேசியை,சம்பந்தப்பட்ட ரசிகரிடம் ஒப்படைத்து வருத்தம் தெரிவித்துவிட்டு,அங்கிருந்து சென்றாா்.

இந்த சம்பவமும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவுகிறது.

விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது குறித்து சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில், பாஜக சாா்பில் போட்டியிடும் குஷ்பு செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நடிகா் விஜய் சைக்கிளில் வந்ததை அரசியலாக்க வேண்டாம். அவா் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டதற்கு வேறு காரணம் இருக்கிறது. விஜய் வீட்டுக்கு அருகே வாக்குப் பதிவு மையம் இருக்கிறது. எனவே அவா் காரை பயன்படுத்தாமல் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டாா். அவ்வளவுதான் விஷயம்’ என்று குஷ்பு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com