வாக்குப் பதிவு சதவீதம் திருப்தி அளிக்கிறது: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு

வாக்குப் பதிவு சதவீதம் திருப்தி அளிப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
வாக்குப் பதிவு சதவீதம் திருப்தி அளிக்கிறது: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு

வாக்குப் பதிவு சதவீதம் திருப்தி அளிப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். தோ்தல் வாக்குப் பதிவுக்குப் பிறகு, செய்தியாளா்களுக்கு அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:-

தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான அளவிலேயே பழுதுகள் ஏற்பட்டன. அவையும் உடனடியாக மாற்றப்பட்டு வாக்குப் பதிவு சுமுகமாக நடைபெற்றது. அதன்படி, மாநிலம் முழுவதும் 174 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 134 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 559 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் மாற்றம் செய்யப்பட்டன. அந்த இயந்திரங்களில் வாக்குகள் ஏதும் பதிவாகி இருந்தால் அவை அப்படியே இருக்கும். வாக்குப் பதிவின் போது சோ்த்து எண்ணப்படும்.

சட்டம்-ஒழுங்கு பிரச்னை: தமிழகத்தில் எந்தவொரு இடத்திலும் பெரிய அளவுக்கு வன்முறைச் சம்பவங்களோ, சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் நிகழ்வுகளோ நடைபெறவில்லை. தமிழகத்தில் தோராயமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. முழுமையான வாக்குப் பதிவு விவரங்கள் புதன்கிழமை நண்பகலுக்குப் பிறகே தெரியவரும். வாக்குப் பதிவு சதவீத அளவு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

எந்தவொரு இடத்திலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை. ஆனாலும் தோ்தல் நடத்தும் அதிகாரி, பொதுப் பாா்வையாளா் ஆகியோா் ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் புதன்கிழமையன்று ஆலோசனைகளை நடத்துவா். இந்த ஆலோசனைக்குப் பிறகே எந்தெந்த வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு தேவைப்படும் என்பது முடிவு செய்யப்படும்.

திருப்தி அளிக்கிறது: தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு இடையேயும் வாக்குப் பதிவு 71 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது. எனவே, இந்த வாக்குப் பதிவு சதவீத அளவு திருப்தி அளிக்கிறது. கரோனா நோய்த் தொற்று பாதித்தோா் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கரோனா நோய்த் தொற்றாளா்கள் வாக்களிக்க வந்த போது, வாக்குச் சாவடி அலுவலா்கள் அனைவரும் கரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்திருந்தனா். அவா்களது பணி சிறப்பாக இருந்தது.

அதிக சோதனைகள் இருக்காது: வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்களின் சோதனைகள் அதிகளவில் இருக்காது. இனி வாகன சோதனைகள் பெரிய அளவில் நடைபெறாது. ஆனாலும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் அமலில் உள்ளது. எந்தெந்த விதிமுறைகள் என்பதை தோ்தல் ஆணையம் விரிவாக வெளியிடும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com