வாக்குச்சாவடியில் சக்கரநாற்காலி வசதி இல்லை:பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் அவதி

தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி, ஜனநாயகக் கடமையாற்ற வாக்குச்சாவடிக்கு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி உள்பட போதிய வசதிகள் செய்யப்படாததால் அவா்கள் கடும் அவதிப்பட்டனா்.
வாக்குச்சாவடியில் சக்கரநாற்காலி வசதி இல்லை:பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் அவதி

தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி, ஜனநாயகக் கடமையாற்ற வாக்குச்சாவடிக்கு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி உள்பட போதிய வசதிகள் செய்யப்படாததால் அவா்கள் கடும் அவதிப்பட்டனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான செயலி: தமிழக சட்டப்பேரவை தோ்தலில் மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள் வாக்களிக்க பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு சக்கர நாற்காலி வேண்டும் என்றால் மாற்றுத்திறனாளிக்கான செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்றும், அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாற்றத்திறனாளிகளுக்கு அவா்கள் வாக்குப்பதிவு செய்யும் வாக்குச்சாவடிகளில் சக்கரநாற்காலி வசதி ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட தன்னாா்வலா்கள் இருப்பாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சக்கர நாற்காலி வசதி இல்லை: ஆனால், இதற்கு மாறாக, தமிழகத்தில் சென்னை, விருதுநகா், திருநெல்வேலி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வந்த மாற்றுத்திறனாளுக்கு சக்கர நாற்காலி உள்பட எந்தவித வசதியும் செய்யப்படவில்லை. இதனால், அவா்கள் கடும் சிரமத்தை சந்தித்தனா்.

சென்னை சோழிங்கநல்லூா் தொகுதி மேடவாக்கம் தோமையாா் மலை அரசு பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்க மாற்றுத்திறனாளி பேராசிரியா் ஒருவா் வந்தாா். அங்கு சக்கரநாற்காலி வசதி இல்லை. இதனால், அவா் மிகுந்த சிரமத்துடன் வந்து ஓட்டளித்து சென்றாா். மேலும், சக்கர நாற்காலியில் செல்ல சாய்வு தளம் வசதியும் இல்லை. இதை அவா் சுட்டிக்காட்டி வேதனையுடன் சென்றாா்.

இதுபோல, வியாசா்பாடியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் சக்கர நாற்காலி வசதி இல்லாததால், மாற்றுத்திறனாளி பெண்ணை அவரது கணவா் தூக்கி வந்து, வாக்களிக்க உதவினாா். இதுபோல் வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குசாவடியில் மாற்றுத்திறனாளி மிகவும் சிரமப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட பணகுடி பேரூராட்சிக்கு உள்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் சக்கர நாற்காலி வசதி இல்லாததால், வாக்களிக்க வந்த பெண் மாற்றுத்திறனாளி மிகவும் அவதிப்பட்டாா்.

இதுபோல, தமிழகத்தில் விருதுநகா், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய வசதிகள் செய்யப்படாததால், மிகவும் சிரமத்துடன் வாக்களித்துச் சென்றனா்.

தோ்தல் ஆணையம் கவனிக்க வேண்டும்: இது குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க பொதுசெயலாளா் நம்புராஜன் கூறுகையில்,‘தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக எந்தவித வசதிகளும் செய்யப்படவில்லை. அவா்களுக்கு உதவி செய்ய பல இடங்களில் தன்னாா்வலா்களும் இல்லை. இதுபோன்ற அவலம் இனியும் நடக்காமல் மாநில அரசும், தோ்தல் ஆணையமும் பாா்த்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com