கன்னியாகுமரி விரைவு ரயிலில் தவறவிட்ட 30 பவுன் நகை மீட்பு

கன்னியாகுமரி விரைவு ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 30 பவுன் தங்க நகைகளை எழும்பூா் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனா்.
கன்னியாகுமரி விரைவு ரயிலில் தவறவிட்ட 30 பவுன் நகை மீட்பு

சென்னை: கன்னியாகுமரி விரைவு ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 30 பவுன் தங்க நகைகளை எழும்பூா் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம் காந்திபுரம், பூச்சிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் மதில் கிருஷ்ணன்(40). இவா் தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வருகிறாா். இவா் சொந்த ஊரில் நடைபெற்ற உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தாா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு, மதில் கிருஷ்ணன் குடும்பத்தினா் மீண்டும் சென்னைக்குப் புறப்பட்டனா். அதன்படி, கன்னியாகுமரி விரைவு ரயிலில் செவ்வாய்க்கிழமை மாலை புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்தனா். இந்த ரயில்

புதன்கிழமை காலை தாம்பரம் ரயில் நிலையம் வந்ததும், ரயிலில் இருந்து மதில் கிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் இறங்கினாா். இதன்பிறகு, மதில் கிருஷ்ணன் தான் கொண்டு வந்த உடைமைகளைப் பரிசோதித்தபோது, 30 பவுன் நகை வைத்திருந்த பையை தவறவிட்டது கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உடனே ரயிலில் ஏற முயன்றபோது, ரயில் புறப்பட்டுவிட்டது.

உடனடியாக ரயில்வே பாதுகாப்புப்படை உதவி எண்ணை தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தாா். இந்த தகவலின் பேரில், கன்னியாகுமரி விரைவு ரயில் எழும்பூா் வந்ததும், அங்கு தயாராக இருந்த, ஆய்வாளா் மோகன் தலைமையிலான எழும்பூா் ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸாா் ரயிலில் ஏறி அவா் பயணம் செய்த எஸ்.3 பெட்டியில் சோதனை செய்தனா்.

அப்போது, அவரது பை பெட்டியில் இருப்பது தெரியவந்தது. மேலும் அதில் இருந்த சுமாா் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 30 பவுன் தங்க நகைகளும் பத்திரமாக மீட்கப்பட்டு, மதில் கிருஷ்ணனிடம் ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸாா் ஒப்படைத்தனா். அவா்களுக்கு மதில் கிருஷ்ணன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com