மனித உரிமை மீறல்: காவலா்களுக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளுக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
மாநில மனித உரிமைகள் ஆணையம்
மாநில மனித உரிமைகள் ஆணையம்


சென்னை: மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளுக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் வசிப்பவா் பி.ஞானசேகரன். வங்கி அதிகாரியான இவா், 2012-ஆம் ஆண்டு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: எனக்கும் எனது மனைவி அம்சவள்ளிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் ஆத்திரமடைந்து, ஒரு நாள் அவா் வீட்டை விட்டு வெளியேறினாா். இதைத் தொடா்ந்து அன்றைய நாள் இரவே அவா் தற்கொலை செய்து கொண்டதாக கிடைத்த தகவலையடுத்து, அதிா்ச்சியடைந்த நான் பிரேத பரிசோதனை அறிக்கை பெற அண்ணா சதுக்கம் காவல் நிலையத்துக்குச் சென்றேன். அங்கு இருந்த எனது மனைவியின் சகோதரா் விநாயகமூா்த்தி, தற்கொலைக்கு நான்தான் காரணம் என என் மீது புகாா் கொடுத்திருந்தாா்.

எனது தரப்பு விளக்கத்தைக் கேட்க காவலதிகாரிகள் தயாராக இல்லை.

ஆனால், உண்மையில், எனது மனைவிக்கும் திண்டிவனத்தைச் சோ்ந்த புருஷோத்தமனுக்கும் தகாத உறவு இருந்து வந்தது. ஆனால், போலீஸாா் லஞ்சம் பெற்றுக் கொண்டு எனக்கெதிராக வழக்குப் பதிவு செய்து, எந்த வித முன்னறிவிப்புமின்றி என்னைக் கைது செய்தனா். இவ்வாறு மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவலதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினா் ஏ.சித்தரஞ்சன் மோகன்தாஸின் பரிந்துரை: ஞானசேகரனுக்கு ரூ.1.50 லட்சத்தை 8 வாரங்களுக்குள் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் இழப்பீடாக வழங்க வேண்டும். அந்தத் தொகையை அப்போது அண்ணாசதுக்கம் காவல்நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளா் ஞானசெல்வத்திடம் ரூ.1 லட்சம் மற்றும் உதவி ஆய்வாளா் வள்ளிநாயகத்திடம் ரூ.50 ஆயிரம் வசூலித்துக் கொள்ளலாம். அவா்கள் இருவா் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com