100% வாக்குப்பதிவு என்பது சாத்தியமாகுமா? ஆகாதது ஏன்?

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
100% வாக்குப்பதிவு என்பது சாத்தியமாகுமா? ஆகாதது ஏன்?
100% வாக்குப்பதிவு என்பது சாத்தியமாகுமா? ஆகாதது ஏன்?


சென்னை: நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடும் வெப்பம் மற்றும் கரோனா தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் குறைவு என்கிறது புள்ளி விவரங்கள்.

உண்மையிலேயே 100 சதவீத வாக்குப்பதிவு என்பது சாத்தியமாகுமா? அவ்வாறு சாத்தியமாக்க வாக்களிப்பதை கட்டாயமாக்கலாமா? இத்தனை வசதிகள் செய்தும் 100 சதவீத வாக்குப்பதிவு என்பது ஏன் சாத்தியமாகவில்லை? என்ற ஏராளமான கேள்விகள் எழுவது வழக்கம்தான்.

முதலில் 100 சதவீத வாக்குப்பதிவு என்பது ஏன் சாத்தியமாகாது என்பதற்கான ஒரு சில காரணங்களைப் பார்க்கலாம்.

தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 15,500. இவர்களில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டவர்கள் மட்டுமே தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டு, தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்த வெறும் 14 சிறைக் கைதிகள் மட்டுமே இந்தத் தேர்தலில் வாக்களித்தனர்.

விசாரணைக் கைதிகள், குறிப்பிட்ட நாள்களுக்குப் பின், பிணையில் சென்று விட முடியும் என்பதால், அவா்களுக்கு, சிறையில் இருந்து வாக்களிக்க, அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால் குண்டா் தடுப்புச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சிறையில் இருப்பவா்களுக்கு மட்டும் சிறைத்துறை வாக்களிக்க அனுமதி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகள், தண்டனை பெற்ற கைதிகள் வாக்களிப்பது என்பது இயலாததாகிறது.

அடுத்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரும், நோயாளிகளுடன் இருப்பவர்களும் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

இதுபோல வெளியூர், வெளிநாடு சென்றவர்கள், தவிர்க்க முடியாத காரணங்களால் பயணத்தில் இருப்பவர்கள் போன்ற ஒரு சிறிய சதவீத மக்களால் வாக்களிக்க இயலாமல் போகிறது.

இதுபோல ஒரு சில காரணிகள், 100 சதவீத வாக்களிப்பு என்பதை எட்டாக்கனியாகவே வைத்திருக்கும். ஆனால், இதெல்லாம் ஒரு சில சதவீத மக்கள்தான் என்றாலும், வாக்களிக்க அனைத்து வழியும் இருந்தும் வாக்களிக்காமல் தவறுபவர்களை எப்படி வாக்களிக்க வைப்பது என்பதுதான் எல்லாவற்றையும் தாண்டி தொடரும் கேள்வியாக உள்ளது.

இது குறித்து ஏற்கனவே பல முறை விவாதங்கள் எழுந்திருக்கும். தலைமைத் தேர்தல் ஆணையர்களும் சொல்லியிருப்பார்கள். அதுபற்றி பார்க்கலாம்.

வாக்களிப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது? வாக்களிக்காவிட்டால் அபராதம் விதிக்கலாமே? இந்தக் கேள்விக்கு தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமியின் கருத்து என்னவென்றால், வாக்குப்பதிவை கட்டாயமாக்குவது என்பது வரவேற்கத்தக்க திட்டம்தான், ஆனால் அதனை ஒரு தனித்துவமான வழியில் செயல்படுத்தலாம். ஆரம்பக்கட்டத்தில், தேர்தலில் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றாத படித்த மற்றும் பணக்காரர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். இதன் மூலம் மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்கிறார்.

மேலும், அவர் பொறுப்பிலிருந்த போது, தேர்தல் ஆணையம் இத்தனை வசதிகளை செய்து கொடுத்தும், ஏன் 27 சதவீத மக்கள் வாக்களிக்கவரவில்லை என்று கேள்வி எழுப்பியபோது, ஒரு குதிரைக்கு நீங்கள் தண்ணீர் வைக்கலாம். ஆனால் தண்ணீரைக் குடிக்க வைக்க முடியாது. 100  சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை அடைய வேண்டும் என்றால், அதற்கு முன்பு பல விஷயங்களை நாம் செய்ய வேண்டும், தற்போது, வெற்றி பெறும் வேட்பாளர் 25 முதல் 40 சதவீத வாக்குகளையே பெறுகிறார். ஆனால், வெற்றி பெறும் வேட்பாளர் குறைந்தபட்சம் 50 சதவீத வாக்குகளையாவது பெற வேண்டும் என்று விதிமுறையை உருவாக்க வேண்டும். பிறகு, வெற்றி பெறும் வாக்காளர் மற்றும் அதற்கடுத்த மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு மட்டும் மீண்டும் மறுதேர்தல் நடத்தி, அதன் மூலம் வெற்றியாளரை அறிவிக்க வேண்டும். ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமே இருந்தாலும் கூட, இது தற்போதைக்கு செயல்முறைக்குக் கொண்டு வர முடியாத திட்டம்தான் என்று தெரிவித்திருந்தார்.

இன்னுமொரு திட்டத்தைக் கூட சோதனை முறையில் பரீட்சித்துப் பார்க்கலாம். அதாவது, மிகக் குறைவாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளுக்கு உள்பட்ட இடங்களில், வாக்களிக்காத படித்த மற்றும் பணக்காரர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்கலாம். மற்றவர்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.  ஒருபோதும் வாக்களிக்காத அனைவருக்கும் தண்டனை அல்லது அபராதம் என்ற முடிவை மட்டும் அரசு எப்போதும் எடுக்கக் கூடாது. ஏனென்றால் அதனால் வாக்களிக்க முடியாத ஏழை மக்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என்கிறார் கோபாலசுவாமி.

ஆனால், வாக்களிப்பதை கட்டாயமாக்குவது என்ற முடிவிலிருந்து சற்று மாறுபடுகிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி.  அவர் இதுபற்றி கூறுகையில், எப்படி வாக்களிப்பது என்பது உரிமையோ, அதுபோல வாக்களிக்காமல் இருப்பதும் கூட அவர்களது உரிமைதான். வாக்களிப்பதைக் கட்டாயமாக்கிய நாடுகளில் கூட 100 சதவீத வாக்குப்பதிவு என்பது சாத்தியமில்லாத ஒன்றுதான். 100 சதவீத வாக்குப்பதிவு என்பதை நோக்கிய பாதையில் முதலில் நாம் செய்ய வேண்டியது, இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது. இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்குவது அல்லது அவர்களது இடங்களுக்கு மாற்றுவது. இதுபோன்றவையும் வாக்குப்பதிவின் அளவைக் குறைத்துக் காட்டும். அடிப்படை விஷயங்களை எல்லாம் மாற்றிவிட்டு, ஒரு  வேளை 80 முதல் 90 சதவீத வாக்குகள் பதிவானால் கூட அது மிகப்பெரிய சாதனைதான் என்கிறார்.

தமிழகத்தில் இந்த அளவுக்கு வாக்குப்பதிவு குறைவாக இருப்பது குறித்து மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் தனது அடையாளத்தை வெளியிட விரும்பாமல் கூறியிருக்கும் தகவலில், ஊரகப் பகுதிகளில் அதிக வாக்குப்பதிவு நடப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. நமது நாட்டில் கல்வி நிலையங்களில் மட்டுமே வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. வாக்குச்சாவடியிலிருந்து வெகு தொலைவில் வாகனங்களை நிறுத்த வேண்டியதால் தொலைவிலிருந்து வருவோர் வாகனத்தில் மட்டுமே வரும்போது அது அவர்களுக்கு சிக்கலாக உள்ளது. சென்னை போன்ற நகரங்களில் வாழும் பெரும்பாலானோர் வாடகை வீடுகளில் வசிப்பதால், அடிக்கடி வீடு மாறுவது ஏற்படும். அதுபோன்ற நேரங்களில், வாக்காளர் அடையாள அட்டையில் எளிதாக முகவரியை மாற்றும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது 72 சதவீத வாக்குப்பதிவு நடந்திருப்பது குறித்து முன்னாள் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறுகையில், 100 சதவீத வாக்குப்பதிவு என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. யார் பதவிக்கு வந்தாலும், எதுவும் மாறப்போவதில்லை. எனவே வாக்களித்து என்ன பயன்? என்று சிலர் நினைக்கிறார்கள். ஊரகப் பகுதிகளில் இருந்த இந்த மனப்பாங்கு, தற்போது நகரப் பகுதிகளுக்கும் பரவி வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த முறை கரோனா அச்சம் வேறு இருந்தது. இந்த நிலையில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது என்று கூறியுள்ளார்.

வருந்தத் தக்க தகவல் என்னவென்றால், மிகப்பெரிய நகரமான சென்னையில் குறைவாக வாக்குகள் பதிவாகியிருப்பதும், தமிழகத்திலேயே மிகக் குறைவான வாக்குகள் பதிவான 5 தொகுதிகளுமே சென்னையில் இடம்பெற்றிருப்பதும்தான். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com