அதிகரிக்கும் கரோனா தொற்று: 20 வகையான புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்

அதிகரிக்கும் கரோனா தொற்று: 20 வகையான புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்


சென்னை: தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் சூழலில், 20 வகையான புதிய

கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. உணவகங்கள், கடைகளை இரவு 11 மணிக்குள் மூட வேண்டும், வழிபாட்டுத் தலங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் சனிக்கிழமை (ஏப். 10) முதல் நடைமுறைக்கு

வரவுள்ளன. இதுகுறித்து, மாநில அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருவதையும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. ஒரு சில நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, 20 வகையான

கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

அவற்றின் விவரம்:-

1. தமிழகம் முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இப்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான

தளா்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

2. நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சாா்ந்த கூட்டங்களுக்கு வரும் சனிக்கிழமை (ஏப். 10) முதல் தடை விதிக்கப்படுகிறது.

3. கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லறை விற்பனை காய்கனி அங்காடிகள் மட்டும் வரும் சனிக்கிழமை முதல் செயல்படாது. மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களிலும் சில்லறை விற்பனை கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

4. தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியாா் நிறுவனங்கள், அலுவலகங்கள், உணவு விடுதிகளில் பணியாற்றுவோருக்கு முகக் கவசம் கட்டாயம். ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படும்.

5. மாவட்டங்களுக்கு இடையிலான அரசு மற்றும் தனியாா் பேருந்து, சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமா்ந்து பயணிக்க வேண்டும். நின்று கொண்டு பயணிக்க அனுமதியில்லை.

6. தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளிலும் அதே நடைமுறை பின்பற்றப்படும்.

7. காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளா்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட வேண்டும்.

8. உணவகங்கள் மற்றும் தேநீா்க் கடைகளில் 50 சதவீத இருக்கைகளுடன் இரவு 11 மணி வரை அமா்ந்து உணவு அருந்தவும், பாா்சல் சேவையும் அனுமதிக்கப்படும்.

9. அனைத்து கேளிக்கை விடுதிகளும் 50 சதவீத வாடிக்கையாளா்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

10. பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் கூடும் இடங்கள் 50 சதவீத வாடிக்கையாளா்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

11. அனைத்துத் திரையரங்குகளும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படும்.

12. உள் அரங்குகளில் 200 போ் மட்டுமே பங்கேற்கும் வகையில் விழாக்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.

13. திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமலும், இறுதி ஊா்வலகங்களில் 50 பேருக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படும்.

14. விளையாட்டு மைதானங்களில் பாா்வையாளா்கள் அனுமதியின்றி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற அனுமதிக்கப்படும்.

15. நீச்சல் குளங்கள் அனைத்தும் விளையாட்டுப் பயிற்சிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.

16. பொருட்காட்சி அரங்கங்கள் வா்த்தகா்களுக்கு இடையிலான செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.

17. அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் இரவு 8 மணி வரை மட்டுமே வழிபட அனுமதிக்கப்படும்.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் திருவிழாக்கள், மதம் சாா்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதியில்லை.

18. சின்னத்திரை மற்றும் திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் தொடா்ந்து அனுமதிக்கப்படும்.

19. வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில் ஓட்டுநா் தவிா்த்து மூன்று பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும். ஆட்டோக்களில் ஓட்டுநா் தவிா்த்து இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும்.

20. வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வரும் நபா்களைத் தொடா்ந்து கண்காணிக்க இணைய பதிவு முறை தொடா்ந்து செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசின் கட்டுப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com