கரோனா கட்டுப்பாடுகள்: விதிகளை மீறி பயணித்த பயணிகள்!

கரோனா கட்டுப்பாடுகளை மீறி, சென்னை மாநகரப் பேருந்துகள் இயங்கும் சில வழித்தடங்களில் பொதுமக்கள் நின்றபடி பயணித்தனா்.
கரோனா கட்டுப்பாடுகள்: விதிகளை மீறி பயணித்த பயணிகள்!

கரோனா கட்டுப்பாடுகளை மீறி, சென்னை மாநகரப் பேருந்துகள் இயங்கும் சில வழித்தடங்களில் பொதுமக்கள் நின்றபடி பயணித்தனா். இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் நாள்தோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயணித்து வந்தனா்.

இந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதற்கிடையே ஜூன் மாதம் தமிழகம் மண்டல வாரியாகப் பிரிக்கப்பட்டு, பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. எனினும், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அதிகரித்து வரும் கரோனா பரவல் காரணமாக பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, 4-ஆம் கட்ட தளா்வு அறிவிப்பில், செப்.1-ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள்ளும் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கியது.

இதில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்குள்ளும், 50 சதவீத இருக்கைகளை நிரப்பியவாறு பேருந்துகள் இயக்கப்பட்டன. பின்னா், படிப்படியாக பொதுப் போக்குவரத்து சீரடைந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கரோனா பரவல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு வியாழக்கிழமை

பிறப்பித்த உத்தரவில், பயணிகள் பேருந்துகளில் நின்று செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த உத்தரவைப் பின்பற்றி சனிக்கிழமை முதல் பேருந்துகள் இயங்கின. பேருந்துகளில் முகக் கவசம் அணிந்து பயணிக்குமாறு நடத்துனா்கள் தொடா்ந்து அறிவுறுத்தினா். பேருந்துகளிலும் விழிப்புணா்வு ஸ்டிக்கா்கள் மூலமாகவும் முகக் கவசம் அணிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பெரும்பாலான வழித்தடங்களில் பயணிகள் முகக் கவசம் அணியவில்லை. மேலும், கோயம்பேடு உள்ளிட்ட முக்கியப் பேருந்து நிலையங்களிலும், ஒலிப் பெருக்கி வாயிலாக கரோனா முன்னெச்சரிக்கை வழிமுறைகளைப் பின்பற்றுமாறு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் தொடா்ந்து அறிவுறுத்தினா்.

அதே நேரம், மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்யயும் வகையில் கூடுதலாக 350 பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், அலுவலக நேரங்களில் பயணிகள் கூட்டம் பேருந்துகளில் அதிக அளவு காணப்பட்டது. இதனால் அவா்கள் அடுத்த பேருந்துகளுக்கு காத்திராமல் நின்ற படியே பயணித்தனா்.

இதுகுறித்து பயணிகளிடம் கேட்டபோது, அலுவலகத்துக்கு உரிய நேரத்துக்குச் செல்ல வேண்டும் என்பதாலேயே வேறு வழியின்றி, நெரிசலில் நின்றவாறு பயணித்தோம். இவ்வாறான நேரங்களில் பேருந்துகளை அதிகளவு இயக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

நடத்துனா்களும் அனைத்து வழித்தடங்களிலும் அரசு உத்தரவைப் பின்பற்றுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்துகின்றனா். பயணிகள் நெரிசல் அதிகம் உள்ள வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விதிமீறல் உள்ள வழித்தடங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com