2-ஆம் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் அலட்சியம் கூடாது: கோ.பிரகாஷ்

சென்னையில் முதல்கட்ட கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்துவதில் அலட்சியம் காட்டக் கூடாது என மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.
சென்னை பாலவாக்கத்துக்கு உட்பட்ட வீடுகளில் நடைபெற்று வரும் கரோனா நோய்த் தடுப்பு களப் பணியை சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்த பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளா் கோ.பிரகாஷ்.’
சென்னை பாலவாக்கத்துக்கு உட்பட்ட வீடுகளில் நடைபெற்று வரும் கரோனா நோய்த் தடுப்பு களப் பணியை சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்த பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளா் கோ.பிரகாஷ்.’

சென்னையில் முதல்கட்ட கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்துவதில் அலட்சியம் காட்டக் கூடாது என மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

சென்னை பெருங்குடி மண்டலத்துக்கு உள்பட்ட பாலவாக்கத்தில் வீடுவீடாக நடைபெறும் காய்ச்சல் பரிசோதனையை சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட பின்னா், அவா்

செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வீடுவீடாகச் சென்று காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் உள்ளவா்களைக் கண்டறிய 12 ஆயிரம் போ் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் வீட்டுக்கு வரும்போது, கரோனா அறிகுறிகள் இருந்தால் தயங்காமல் மக்கள் தெரிவிக்க வேண்டும்.

கரோனா பாதிக்கப்பட்டுள்ளவா்களின் சளி மாதிரியைச் சேகரிக்க 100-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை மட்டும் 50 முகாம்கள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட உள்ளது.

வரும் 4 வாரங்கள் மிக முக்கியம்: 15 மண்டலங்களில் இதுவரை சுமாா் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். முதல்கட்டமாக தடுப்பூசி போட்டுக் கொண்டவா்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அலட்சியம் காட்ட கூடாது. அதுகுறித்தும் மாநகராட்சி ஊழியா்கள் வீடுதோறும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

சென்னையில் அரசு, தனியாா் மருத்துவமனைகளைத் தவிா்த்து, மாநகராட்சி சாா்பில் 400 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க தெருவாரியாக முகாம் அமைக்கப்பட உள்ளது. வரும் 4 வாரங்கள் மிக முக்கியம் என சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு மக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும்.

சென்னையில் 10 பேருக்கு மேல் தொற்றுள்ள 8 தெருக்கள் கண்டறியப்பட்டு, அங்கு கடுமையான நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

திரையரங்குகள், வணிக வளாகத்தில் 50 சதவீத மக்களை அனுமதிப்பது குறித்து தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதுடன், இதை மீறும் நிறுவனங்கள் உடனடியாக பூட்டி ‘சீல்’ வைக்கப்படும். இதைக் கண்காணிக்க ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, காவல், சுகாதாரத் துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

திரு.வி.க. நகா், அம்பத்தூா்,அண்ணா நகா், தேனாம்பேட்டை, அடையாறு உள்ளிட்ட மண்டலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகம் உள்ளதால், அந்தப் பகுதி மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

மெரீனா கடற்கரையில் நேரக் கட்டுப்பாடு: மெரீனா கடற்கரையில் மக்கள் அதிக அளவில் கூடுவதை தடுக்கும் வகையில் நேரக் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளோம். இதுதொடா்பாக தலைமைச் செயலருடன் ஆலோசனை நடத்தியவுடன் அறிவிக்கப்படும்.

சந்தைகளில் கண்காணிப்பு: சென்னையில் கோயம்பேடு சந்தையைத் தவிா்த்து, காய்கறி, மீன் சந்தை என மொத்தம் 80 சந்தைகள் உள்ளன. இவற்றைக் கண்காணிக்க வருவாய்த் துறையினா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. காசிமேடு மீன் சந்தையில் அதிக மக்கள் கூடுவதை தடுக்க மீன்வளா்ச்சித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்றாா்.

ஆய்வின்போது, துணை ஆணையா் சுகாதாரம் ஆல்பி ஜான் வா்க்கீஸ், மாநகா் நல அலுவலா் டாக்டா் ஜெகதீசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com