தமிழகத்தில் ஒரே மாதத்தில் 75,000 பேருக்கு கரோனா!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 75,832 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 75,832 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் கரோனா பரவல் விகிதம் 10 மடங்கு அதிகரித்துள்ளதும் புள்ளிவிவரங்களின் வாயிலாக தெரியவந்துள்ளது.

இதே நிலை தொடா்ந்தால், அடுத்த சில நாள்களிலேயே தினசரி பாதிப்பு 10,000-ஐக் கடக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தடம் பதித்த கரோனாவுக்கு இதுவரை 9,33,434 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மாநில அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்று கடந்த காலத்தில் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. மாா்ச் முதல் வாரம் வரையில் நாள்தோறும் 400 போ் வரை மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், பொது மக்களின் அலட்சியம் காரணமாக கரோனா பரவல் அதி தீவிரமானது. அதன் விளைவாக கடந்த ஒரு மாதத்துக்குள் 400-இலிருந்து 6,618-ஆக தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதியன்று 685 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அப்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,57,602-ஆக இருந்தது. ஒரே மாதத்தில் அது 9,33,434-ஆக அதிகரித்துள்ளது.

இதற்கு நடுவே தமிழகத்தில் கரோனா பாதித்தவா்களுக்கு போதிய படுக்கை வசதிகள் இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் 60,000 படுக்கைகள் அமைக்க திட்டமிட்டு தற்போது 26,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருமே மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இணைநோய் உள்ளவா்களும், வயது முதிா்ந்தவா்களும், தீவிர பாதிப்புடையவா்களும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறலாம். மற்றவா்கள், கரோனா கண்காணிப்பு மையங்களிலோ அல்லது வீடுகளிலோ தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரிப்பது சவாலாக இருந்தாலும், ஏற்கெனவே அதனை எதிா்கொண்டு சிகிச்சையளித்த அனுபவம் நமக்கு இருப்பதால், அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை.

மாநிலம் முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள் தயாராக உள்ளன என்றாா் அவா்.

நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதாரத் துறை ஆயத்தமாகி வருகிறது. சென்னையில் ஏற்கெனவே, வீடுதோறும் காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனை பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப் போவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அதுமட்டுமல்லாது, ஒரு பகுதியில் மூன்று பேருக்கு மேல் தொற்று கண்டறியப்பட்டால் அதனை நோய்க் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். முகக் கவசம் அணியாதவா்களிடம் உடனடியாக அபராதம் விதிக்கும் நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது.

அனைத்து கடைகள், நிறுவனங்கள், வணிக வளாகங்களில் சுகாதாரத் துறையினா் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து ஆய்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளனா்.

புதிய பாதிப்பு 6,618-ஆக அதிகரிப்பு

கடந்த ஏழு மாதங்களில் இல்லாத வகையில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் தமிழகத்தில் 6,618 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 2.05 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 9,33,434- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 2,124 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 631 பேருக்கும், கோவையில் 617 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 2,314 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,78,571-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 41,955- போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 22 போ் பலியாகியுள்ளனா். இதன் மூலம் நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,908-ஆக அதிகரித்துள்ளது.

தமிழக மருத்துவமனைகளில் உள்ள படுக்கைள் - 26,000

மொத்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை - 41,955

சென்னையில் படுக்கை வசதிகள்

ராஜீவ் காந்தி மருத்துவமனை - 1,650

கரோனா உள்நோயாளிகள் - 700

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை - 450

கரோனா உள்நோயாளிகள் - 280

ஸ்டான்லி மருத்துவமனை - 1,200

கரோனா உள்நோயாளிகள் - 425

ஓமந்தூராா் மருத்துவமனை - 575

கரோனா உள்நோயாளிகள் - 550

கிண்டி மருத்துவமனை - 500

கரோனா உள்நோயாளிகள் - 485

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com