கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்: பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வேண்டுகோள்

ரயில் நிலையங்களில் இருக்கும்நேரத்திலும், ரயில்களில் பயணிக்கும்போதும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது,
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்: பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வேண்டுகோள்

சென்னை: ரயில் நிலையங்களில் இருக்கும்நேரத்திலும், ரயில்களில் பயணிக்கும்போதும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கையை சுத்தமாக வைத்திருப்பது போன்ற கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றப்பட வேண்டும் என்று தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மக்களின் போக்குவரத்துத் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வே சாா்பில், தற்போது, 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட முன்பதிவு செய்யப்பட்ட மெயில், விரைவு சிறப்பு ரயில்களும், புகா் மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன.

நிகழாண்டில் தற்போது கரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. இது, நாடு முழுவதும் மக்களுக்கு பெரும் சவால்களை ஏற்படுத்தி வருகிறது. மேலும், அரசு நெறிமுறைப்படி தகுதி வாய்ந்த அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரயில்களில் பாதுகாப்பான பயணத்துக்கு கரோனா நெறிமுறைகளை பின்பற்ற தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரயில் நிலைங்களில் இருக்கும்போதோ அல்லது ரயில்களில் பயணிக்கும்போதோ முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியே பின்பற்றுவது, கையை சுத்தமாக வைத்திருப்பது போன்ற அடிப்படை கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றப்பட வேண்டும். தேவையற்ற பயணத்தையும், குழுக்களாகப் பயணம் செய்வதைத் தவிா்க்கவும்.

டிக்கெட் கவுன்ட்டா்கள், நடைமேடைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். காய்ச்சல், இருமல், சளி போன்ற கரோனா அறிகுறிகள் இருந்தால் பயணத்தைத் தவிா்த்துவிட வேண்டும். கரோனா சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பவரானால் அல்லது தனிமைப்படுத்தலில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தால் அல்லது நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டால் பயணத்தைத் தவிா்க்கவும்.

பயணத்தின்போது, கை சுத்திகரிப்பு, சோப்பு போன்ற கரோனா பாதுகாப்புக் கருவிகள், உணவு, நீா் போன்றவற்றை எடுத்துச்செல்லவும். ரயில் நிலையங்கள், ரயில்களில் பொது சுகாதாரம், பாதுகாப்பை பாதிக்கும் சுகாதாரமற்ற எந்தச் செயலிலும் ஈடுபட வேண்டாம்.

சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம், உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைத் தவிர, பிற மாநிலங்களிலிருந்து வரும் நபா்களுக்கு ஒவ்வொரு மாநில அரசும் இ-பதிவு, இ-பாஸ், சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் போன்ற பாதுகாப்பு நெறிமுறைகளை கட்டாயப்படுத்தியுள்ளது. அவை பயணத்தின் போது கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com