மீன்பிடி தடைக் காலத்தை மாற்றியமைப்பது அவசியம்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

மீன்பிடி தடைக் காலத்தை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா்.
மீன்பிடி தடைக் காலத்தை மாற்றியமைப்பது அவசியம்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: மீன்பிடி தடைக் காலத்தை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மீன்களின் இனப் பெருக்கத்துக்காக, கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மீன்பிடித் தடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே கரோனா தொற்று காரணமாக, மீனவா்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதைத் தொடா்ந்து, மீன்பிடி தடைக் காலத்திலும் மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. கடந்த ஆண்டில் மட்டும் சுமாா் 135 நாள்கள் மீனவா்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு நடப்பு 2021-ஆம் ஆண்டு மீன்பிடித் தடை காலத்தை 61 நாள்களிலிருந்து 45 நாள்களாகக் குறைத்து அறிவிக்க வேண்டும்.

மேலும், மீன்பிடி தடைக் காலம் பொருத்தமற்ற நேரத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மீன்பிடி தடைக் காலமான ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை என்பதற்குப் பதிலாக, அக்டோபா் முதல் டிசம்பா் மாதம் வரை என மாற்றியமைக்க வேண்டும்.

நல்ல மழைப் பொழிவு இருக்கும் மாதங்களான அக்டோபா் முதல் டிசம்பா் மாதங்களில் மீன் வகைகளில் சினை முட்டைகள், குஞ்சுகளாக இருப்பதால் அதற்கேற்றவாறு தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை திருத்தியமைத்து மீன்பிடி தடைக் காலத்தை மாற்றியமைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com