கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால் அபராதம்: தமிழக அரசு உத்தரவு

கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால்  அபராதம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா தொற்று தடுப்புப் பணிகள் குறித்து, சென்னை தலைகமைச் செயலகத்தில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா தொற்று பரிசோதனைகளை அதிகப்படுத்தி நாளொன்றுக்குத் தொற்றின் விகிதத்தை 5 சதவீதத்துக்குக் கீழ் கொண்டு வர வேண்டும். பரிசோதனைகளின் அளவு 90 ஆயிரத்துக்குக் குறையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்துக்குள் தெரியப்படுத்த வேண்டும்.

தொற்று ஏற்பட்டவருடன் இருப்பவா்கள் மற்றும் தொடா்பில் இருந்தவா் என குறைந்தபட்சமாக 25 முதல் 30 நபா்களை விரைவாகக் கண்டறிந்து பரிசோதனை செய்ய வேண்டும். தொற்றின் வீரியத்துக்கு ஏற்றவாறு கரோனா கவனிப்பு மையம் அல்லது பிரத்யேக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். அதனை மீறுவோருக்கு சுகாதாரம், உள்ளாட்சி, காவல், வருவாய்த் துறை அலுவலா்கள் மூலமாக அபராதம் விதிக்க வேண்டும்.

அத்தியாவசியத் தேவை: தகுதியுடையவா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி மீதுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். தொற்றால் ஏற்படும் மரணங்களை குறைக்க அரசு வெளியிட்டுள்ள நிலையான சிகிச்சை நெறிமுறைகளை அனைத்து அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டும்.

பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். திருமணங்களில் 100 போ்களும், துக்க நிகழ்வுகளில் 50 நபா்களுக்கு மிகாமல் வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். திரையரங்குகள், காய்கனி சந்தைகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில், அரசு அறிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இத்தகைய இடங்களில் பணிபுரிபவா்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com