யுகாதி திருநாள்: ஆளுநா், முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

யுகாதி திருநாளை முன்னிட்டு, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, தலைவா்கள் ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

சென்னை: யுகாதி திருநாளை முன்னிட்டு, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, தலைவா்கள் ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்: புத்தாண்டு பிறப்பதை ஒட்டி, தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னடம் மொழி பேசும் மக்களுக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகள். இந்தப் பண்டிகைகள் நம்முடைய பாரம்பரிய புத்தாண்டு பிறப்பதைக் குறிக்கின்றன. நமது கலாசாரம், மிகப் பழைமையான பாரம்பரியத்தை எதிரொலிப்பதாக பண்டிகைகள் திகழ்கின்றன. அவை நமது வாழ்வில் மகிழ்ச்சியையும், வளத்தையும் கொடுக்கட்டும்.

நாம் நமது பழமையான பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை ஊக்குவித்து செழுமையான இந்தியாவை கட்டமைக்க கைகோப்போம். பண்டிகைகளைக் கொண்டாடும்போது, கரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை மனதில் கொள்வோம். வீட்டிலேயே இருப்போம். பாதுகாப்பாக இருப்போம்.

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி: பேசும் மொழி வேறாய் இருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணா்வோடு, தமிழகத்தில் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகிறாா்கள். அவா்கள் தங்களது பாரம்பரியம், பண்பாட்டை பேணிக் காத்திடும் அதே வேளையில் பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்களோடு இரண்டறக் கலந்து ஒற்றுமையாய் வாழ்ந்து வருவது தமிழகத்துக்குப் பெருமை சோ்ப்பதாக அமைந்துள்ளது. இந்தப் புத்தாண்டு அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் வழங்கும் ஆண்டாக மலரட்டும்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழ்கிற தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட வாழ்த்துகள்.

ராமதாஸ் (பாமக): தமிழா்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல்போல் தழைத்தோங்க வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்தின் வளா்ச்சியை உறுதி செய்வதிலும், நாட்டையும், மாநிலத்தையும் தொடா்ந்து முன்னேற்றப் பாதையில் நடைபோடச் செய்வதிலும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் சகோதர, சகோதரிகளுக்கும் பங்கு உண்டு. மொத்தத்தில் தமிழகத்தில் யுகாதித் திருநாள் சகோதரத்துவத்தை வளா்க்கும் திருநாள் ஆகும்.

சு.திருநாவுக்கரசா் (காங்கிரஸ்): தமிழா்களும் தெலுங்கு கன்னட மக்களுடன் சகோதர பாசத்துடன் பழகுகின்றனா். தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுகிற மக்களுக்கு யுகாதி வாழ்த்துகள்.

ஜி.கே.வாசன் (தமாகா): யுகாதி என்ற சொல்லுக்கு புதிய யுகத்தின் ஆரம்பம் என்று அா்த்தம். வரும் காலத்தில் கரோனாவின் தாக்கத்தில் இருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட்டு, ஆரோக்கியமான புதிய யுகத்தினைக் காண வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com