தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதனின் தாய் மறைவு: தலைவர்கள் இரங்கல்

'தினமணி' நாளிதழ் ஆசிரியர் கி. வைத்தியநாதனின் தாயார் மீனாட்சி கிருஷ்ணன் (90), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஏப்.14) காலை காலமானார்.
தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதனின் தாய் மறைவு: தலைவர்கள் இரங்கல்


சென்னை: 'தினமணி' நாளிதழ் ஆசிரியர் கி. வைத்தியநாதனின் தாயார் மீனாட்சி கிருஷ்ணன் (90), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஏப்.14) காலை காலமானார்.

மீனாட்சி கிருஷ்ணன், அம்பாசமுத்திரம் மதுரா கோட்ஸில் (ஹார்வி மில்) மேலாளராகப் பணிபுரிந்த காலஞ்சென்ற வி.எஸ்.ஆர் கிருஷ்ணனின் மனைவி ஆவார்.

அவருக்கு மகன் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன், மகள் அஞ்சனிநாதன் ஆகியோர் உள்ளனர். மீனாட்சி அம்மாளின் இறுதிச் சடங்குகள், சென்னையில் உள்ள வில்லிவாக்கம் மயானத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றன.

முதல்வர் இரங்கல்: 

கி.மீனாட்சி அம்மாளின் மறைவுக்கு, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக முதல்வர் தனது சுட்டுரைப் பதிவில் புதன்கிழமை கூறியிருப்பதாவது: 

தினமணி நாளிதழ் ஆசிரியர் கி. வைத்தியநாதனின் தாயார் மீனாட்சி கிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவரை இழந்து வாடும் தினமணி ஆசிரியர் வைத்தியநாதனுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அனுதாபங்கள். மறைந்த மீனாட்சியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்: தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதனின் அன்புக்குரிய தாயார் மீனாட்சி கிருஷ்ணனின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனைக்கு உள்ளானேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெற்ற அன்னையின் பிரிவால் வாடும் வைத்தியநாதனுக்கும், அவருடைய உற்றார் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தினமணி நாளிதழின் ஆசிரியர் வைத்தியநாதனின் தாயார் மீனாட்சி கிருஷ்ணன், உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

இந்தியாவின் பெரும்பான்மையான அரசியல் தலைவர்களுடன் தினமணி வைத்தியநாதனுக்கு நெருங்கிய நட்பு உண்டு. இந்திய அரசியலின் அனைத்து விவரங்களையும் அவர் அறிந்தவர். மிகவும் இளம் வயதிலேயே பத்திரிகையாளர் ஆனவர். அவரது இந்த வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் பின்னணியில்  உந்துசக்தியாக திகழ்ந்தவர் அவரது தாயார் மீனாட்சி கிருஷ்ணன் ஆவார். அவரது இழப்பு தினமணி ஆசிரியர் வைத்தியநாதனைப் பொருத்தவரை எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாதது ஆகும்.

தாயாரை இழந்துவாடும் வைத்தியநாதனுக்கும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எனது  ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: தினமணி ஆசிரியர் வைத்தியநாதனின் தாயார் மீனாட்சி கிருஷ்ணன், உடல்நலக் குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். தாயாரை இழந்து வாடும் வைத்தியநாதனுக்கும், அவரது குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

சென்னை முன்னாள் மேயர் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன், திமுக வர்த்தகர் அணிச் செயலாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம், முன்னாள் அமைச்சர் செந்தமிழன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திநகர் ஸ்ரீராம், நாச்சிக்குளம் சரவணன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆறுமுகம் (எ) சின்னையன், சென்னை மாநகராட்சி சுகாதார நிலைக்குழு முன்னாள் தலைவர் அ. பழனி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே. சிரஞ்சீவி, தமிழக பாஜக ஊடகப் பிரிவு தலைவர் ஏஎன்எஸ் பிரசாத் உள்ளிட்ட பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ்,  உளவுத் துறை ஐஜி ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் சார்பில் மீனாட்சி அம்மாளின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோல், அரசியல் பிரமுகர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com