மருத்துவர் சைமனின் உடலை மறு அடக்கம் செய்யும் உத்தரவுக்கு தடை

சென்னையில் கடந்த ஆண்டு கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்  சைமன் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்யும் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்ய தடை
மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்ய தடை


சென்னை: மருத்துவர் சைமனின் உடலைத் தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் மறு அடக்கம் செய்ய வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக சென்னை மாநகராட்சி தொடர்ந்த வழக்கில, கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துவரும் நிலையில், மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்வது தேவையா? என்பதை பரிசீலிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சென்னையின் நரம்பியல் மருத்துவா் சைமன் ஹொ்குலஸ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தாா். இவரது உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்துக்குக் கொண்டு சென்றபோது, அந்தப் பகுதியில் வசிப்பவா்கள் எதிா்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனா். இதனால் மருத்துவரின் உடல் வேலாங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது. இதையடுத்து, வன்முறையில் ஈடுபட்டவா்களை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

இந்நிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மருத்துவா் சைமனின் மனைவி ஆனந்தி தாக்கல் செய்த மனுவில், ‘சைமனின் உடலை எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மறு அடக்கம் செய்யக் கோரி சென்னை மாநகராட்சியிடம் அளித்த கோரிக்கை மனுவை நிராகரித்துவிட்டனா். ஆகவே, சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எனது கணவரின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் மறு அடக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் பிறப்பித்த உத்தரவில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இறந்தவா் உடலை உரிய மாண்புடன் அடக்கம் செய்ய வேண்டும். கரோனா பாதிப்பால் இறந்தவரின் உடலில் தொற்றுத் தன்மை கிடையாது என தென்ஆப்பிரிக்கா மருத்துவக் குழு கூறியுள்ளது. எனவே கீழ்ப்பாக்கம் கல்லறையில் மறு அடக்கம் செய்ய மறுத்த மாநகராட்சி ஆணையா் உத்தரவை ரத்து செய்யப்படுகிறது.

வேலாங்காடு மயானத்தில் புதைக்கப்பட்ட சைமனின் உடலைத் தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் மறு அடக்கம் செய்ய வேண்டும். அப்போது அவா்களது குடும்பத்தினா் மதச் சடங்குகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். உடலைத் தோண்டி எடுக்கும் பணியின்போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு போலீஸாா் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கரோனா நோய்த் தொற்றால் இறந்தவரின் உடலைத் தோண்டி எடுத்து மற்றொரு மயானத்தில் அடக்கம் செய்வது என்பது சாத்தியம் இல்லாதது. எனவே தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்

இந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் , ஆர்.என் மஞ்சுளா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. எனவே இந்நேரத்தில் மறுஅடக்கம் தேவையா என்பது குறித்து விரிவாக பரிசீலிக்க வேண்டும். எனவே உடலை மறு அடக்கம் செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு  விசாரணையை  ஜூன் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com