கண்ணகி கோயிலில் விழா நடத்த கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கரோனா தொற்று பரவல் காலத்திலும் சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல, மகர ஜோதி பூஜை காலத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டது
கண்ணகி கோயில் (கோப்பு படம்)
கண்ணகி கோயில் (கோப்பு படம்)

கம்பம்: கரோனா தொற்று பரவல் காலத்திலும் சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல, மகர ஜோதி பூஜை காலத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டது போல்  கண்ணகி கோயிலில் விழாவையும் நடத்தி, பக்தர்களை அனுமதிக்கவும் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைக்கு வந்தது.

தமிழக கேரள மாநில எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் ஆண்டிற்கு ஒரு நாள் சித்ரா பெளர்ணமி அன்று முழுநிலவு விழா கொண்டாடப்படும்.

கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் பிரச்னையால் மங்களதேவி கண்ணகி கோயில் முழுநிலவு விழா கொண்டாடவில்லை. 

இந்தாண்டு கரோனா தொற்று பரவல் இருந்தும் சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல, மகர ஜோதி பூஜை நடைபெற்றது. 

அதைப்போல இந்த ஆண்டு வரும் ஏப்.27 -ஆம் தேதி கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு விழா நடத்த வேண்டும் என்று தேனி மாவட்டம் கூடலூரைச்சேர்ந்த பி.எஸ்.நேரு கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்காக கேரள உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் கல்குவா ஆஜரானார்.

வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது, கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் நீதிமன்ற அமர்வு வரும் ஏப்.20 க்குள் (செவ்வாய்கிழமை) முடிவு தெரிவிக்குமாறு கூறியுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோயிலும் கண்ணகி கோயிலும் பெரியார் புலிகள் சரணாலயத்திற்குள் 20 கி.மீ.  தூர எல்லைக்குள் வருகிறது.

 இரு கோயில்களுக்குள் வித்தியாசம் காட்டக்கூடாது என்ற கருத்தை முன் நிறுத்தி இந்த வழக்கு தொடரப்பட்டதாக பி.எஸ். நேரு கூறினார். 

மேலும் அவர் கூறியது: சித்திரை முழுநிலவு விழா நாளன்று  கண்ணகி கோயிலும் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் மூலம் திறக்க வேண்டும் என கம்பம் மங்கல தேவி கண்ணகி அறக்கட்டளையினர், இடுக்கி, தேனி மாவட்ட ஆட்சியர்களுக்கு  மனு நேரடியாகத் கொடுத்தனர். 
ஆனால் இரண்டு ஆட்சியர்களும் பதில் தெரிவிக்கவில்லை. 

இந்நிலையில் சித்ரா பெளர்ணமி விழா வரும் ஏப்.27 ஆம் தேதி நடக்க வேண்டும். இன்னும் 10 நாள்களே உள்ளன. இரண்டு ஆண்டுகளாக கோயிலுக்குள் புதர் மண்டியிருக்கிறது. அதை சரி செய்தால் தான் கோயிலுக்குள்ளேயே போக முடியும், அதனால் வழக்கு தொடரப்பட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com