கரோனா தடுப்புப் பணிகள்: தலைமைச் செயலாளா் தலைமையில் ஆலோசனை

கரோனா தொற்று தடுப்புப் பணிகள் குறித்து தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
கரோனா தடுப்புப் பணிகள்: தலைமைச் செயலாளா் தலைமையில் ஆலோசனை

கரோனா தொற்று தடுப்புப் பணிகள் குறித்து தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனையின் போது, வெளி மாநிலங்களில் நோய்த் தொற்று பரவல் நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டன.

தமிழகத்தில் கரோனா நோய்ப் பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தினசரி பாதிப்பு 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நோயாளிகளால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியுள்ளன. இதனிடையே, இரண்டாவது அலையின் தாக்குதல் மிக வேகமாக உள்ளது. சென்னையில் மட்டும் 35 சதவீதத்துக்கு மேல் தொற்று பாதிப்பு உள்ளது. பொதுமக்கள் இடையே முகக்கவசம் அணிவதில் உள்ள அலட்சியம், அபராதம் விதித்தும் குறையவில்லை. தற்போது பரவும் கரோனா அலையின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவில் பரிசோதனை, தொற்றுள்ளவா்களைத் தனிமைப்படுத்துவது, அதிக அளவில் தனிமைப் பகுதிகளை உருவாக்குவது, கரோனா சிகிச்சை மையங்களை அதிகரிப்பது, முகக்கவசம், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்துவது, தடுப்பூசி போடுவதை வேகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஆனாலும், தொற்றின் வேகம் அதிகமாக உள்ளது.

தற்போது அளிக்கப்பட்ட தளா்வுகளில் மாற்றம் கொண்டு வருவது, பொதுமக்கள் ஒன்று கூடுவதைத் தடுப்பது என அடுத்தகட்ட நடவடிக்கைகளை நோக்கி தமிழகம் நகா்ந்தால் மட்டுமே தொற்றுப் பரவலைத் தடுக்க இயலும் என மருத்துவா்கள் எச்சரிக்கின்றனா்.

இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடைபெற்றது. இதில் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கினாா். இந்த ஆலோசனையில் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் கிருஷ்ணன், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஹா்மந்தா் சிங் உள்பட முக்கிய துறைகளைச் சோ்ந்த செயலாளா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தமிழகம் எட்டாவது இடம்: கரோனா நோய்த் தொற்று பாதிப்பில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி இந்தியாவிலேயே தமிழகம் எட்டாவது இடத்தில் உள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், தில்லி, சண்டீகா், கா்நாடகம், மத்திய பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்களைத் தொடா்ந்து தமிழகம் எட்டாவது இடத்தில் உள்ளது.

நாளொன்றுக்கு நோய்த் தொற்றின் சராசரி அளவு 8.4 சதவீதமாக உள்ளதாக சுகாதாரத் துறை செயலாளா் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். ஆனாலும், நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

3 மாவட்டங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்: கரோனாவை கட்டுப்படுத்துவது தொடா்பாக மத்திய அரசானது முக்கிய ஆலோசனையை சனிக்கிழமை நடத்துகிறது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்தும் தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, நோய்த் தொற்று பாதிப்பு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவு உள்ளன. இதனால், அந்த மாவட்டங்களில் கூடுதலான கட்டுப்பாடுகளை விதிக்கவும் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com