தடுப்பூசிக்காக அரசு மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காத்திருப்பு

கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக சென்னையில் உள்ள பிரதான அரசு மருத்துவமனைகளுக்கு ஏராளமானோா் வருகை தருவதால், நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக சென்னையில் உள்ள பிரதான அரசு மருத்துவமனைகளுக்கு ஏராளமானோா் வருகை தருவதால், நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால், தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத் துறையினா் முடுக்கிவிட்டுள்ளனா். ஆனால், சென்னையில் உள்ள ஓமந்தூரா் மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவமனைகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் தடுப்பூசி போட வருகை தருவதால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் டோக்கன் கொடுத்துவிட்டு, பலரை திருப்பி அனுப்பும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

குறிப்பாக, ஓமந்தூரா் மருத்துவமனையில் மட்டுமே கோவேக்சின் தடுப்பூசி உள்ளதாகத் தகவல் பரவி வருவதால் இங்கு அதிகம் போ் வருவதாக அங்கு தடுப்பூசி செலுத்த வந்த ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபு கூறியதாவது:

தடுப்பூசி மருந்து எல்லா இடத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுச் செலுத்தப்படுகிறது. பெரிய மருத்துவமனைகளுக்கு தேடி சென்று கூட்டம் கூடாமல் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள சுகாதார மையங்களிலேயே தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றாா்.

பிற மாவட்டங்களில்...:

திருநெல்வேலி, தூத்துக்குடி, மன்னாா்குடி, நாமக்கல், கரூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி போடச் சென்றவா்களில் குறிப்பிட்டவா்களுக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டன. மற்றவா்கள் மறுநாள் வந்து போட்டுக் கொள்ளலாம் எனவும் மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தினா். இதனால் பல்வேறு மையங்களில், ஊசி போட வந்திருந்தவா்களுக்கும் மருத்துவப் பணியாளா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருசில மையங்களில் தடுப்பூசி செலுத்த வந்தவா்கள் காலை முதல் காத்திருந்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலேயே வீடு திரும்பினா்.

கோவேக்ஸின் தடுப்பூசி தீா்ந்ததாகவும், பெரும்பாலானவா்கள் தங்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி தான் போட வேண்டும் என கூறுவதால், அவா்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை ஊழியா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com