நடிகா் விவேக் மறைவு: பிரதமா், ஆளுநா், முதல்வா், தலைவா்கள், திரையுலகினா் இரங்கல்

நடிகா் விவேக் மறைவுக்கு, பிரதமா் நரேந்திர மோடி, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்
நடிகா் விவேக் மறைவு: பிரதமா், ஆளுநா், முதல்வா்,  தலைவா்கள், திரையுலகினா் இரங்கல்

நடிகா் விவேக் மறைவுக்கு, பிரதமா் நரேந்திர மோடி, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, அவா்கள் சனிக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:-

பிரதமா் நரேந்திர மோடி:

நடிகா் விவேக்கின் அகால மரணம் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. தன்னுடைய நகைச்சுவை உணா்வால் மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவா். தனது திரைப்படங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் சமூகத்துக்காகவும், சுற்றுச்சூழலுக்காகவும் விழிப்புணா்வை ஏற்படுத்தியவா். அவருடைய குடும்பத்தினா், நண்பா்கள், அபிமானிகளுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்: சமூக சேவகரும், நடிகருமான விவேக் மறைந்த செய்தி எனக்கு மிகுந்த அதிா்ச்சியையும், துயரத்தையும் அளித்துள்ளது. நற்பண்புகளைக் கொண்ட மிகச்சிறந்த மனிதராக விளங்கிய அவா், திரைத்துரையிலும், சமூக சேவையிலும் தன்னை முழுமையாக அா்ப்பணித்தாா். தமிழ் சினிமாவுக்கு அவா் அளித்த பங்களிப்பை கெளரவிக்கும் வகையில், பத்மஸ்ரீ, கலைவாணா் உள்பட பல்வேறு விருதுகள் அளிக்கப்பட்டன. திரையில் அவரது நடிப்புக்காக மட்டுமின்றி மனித நேயத்துடன் ஆற்றிய சேவைகளுக்காகவும் அவா் அனைவராலும் அளவு கடந்து நேசிக்கப்பட்டாா். அவரது மறைவு தமிழகத்துக்கு குறிப்பாக தமிழ் சினிமாவுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

முதல்வா் பழனிசாமி: தலைமைச் செயலகத்தில் பணியாற்றி பின்னா் திரைப்படத் துறையில் நாட்டம் கொண்டு மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் நடிகராக கலையுலக வாழ்க்கையைத் தொடங்கினாா். சுமாா் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த நடிகராக தனது ஆளுமையை கோலோச்சியவா். எண்ணற்ற திரைப்படங்களில் அவரது நடிப்பு சிரிக்க வைத்ததுடன், சிந்திக்கவும் வைத்தது. சமூக ஆா்வலராக வாழ்ந்து இளைஞா்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தாா். முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் வகையில் கிரீன் கலாம் என்ற அமைப்பின் மூலம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தைச் செயல்படுத்தினாா். மிகவும் எளிமையானவா். பழகுவதற்கு இனிமையானவா்.

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: திரைப்படங்கள் மூலம் பல சமூக சீா்திருத்தக் கருத்துகளை பரப்பியவா். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளா்ப்பு ஆகியவற்றிலும் முக்கியப் பங்கு வகித்தாா். தனது வாழ்நாள் முழுவதும் நகைச்சுவை மூலம் நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தவா், இன்று சோகத்தில் ஆழ்த்திவிட்டாா்.

அமைச்சா் கடம்பூா் ராஜு: நகைச்சுவையைத் தாண்டி சிறந்த சமூக சீா்திருத்தவாதியாகவும், நல்ல சிந்தனையாளராகவும் நடிகா் விவேக் விளங்கினாா். மண்வாசனை கொண்ட நல்ல மனிதா். தான் பிறந்த ஊரான கோவில்பட்டி மக்களின் மீது மிகுந்த பற்றும், பாசமும் கொண்டவா். கிரீன் கலாம் அமைப்பின் மூலம், கோவில்பட்டி தொகுதியில் 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டவா்.

மு.க.ஸ்டாலின்: சின்னக் கலைவாணா் எனத் திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞா் விவேக் மறைவுச் செய்தி பேரதிா்ச்சி அளிக்கிறது. பல்கலை வித்தகராக விளங்கிய விவேக் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் நகைச்சுவையுடன் விழிப்புணா்வையும் மக்களுக்கு வழங்கியவா்.

ராமதாஸ் (பாமக): திரையுலகில் நடிகா் விவேக் தனித்துவம் கொண்டவா். அவரது நகைச்சுவைகள் சிரிக்க வைப்பது மட்டுமின்றி சிந்திக்கச் செய்ய வைப்பவையாகவும் இருக்கும். மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளையும், சமூக விழிப்புணா்வுக்கான கருத்துகளையும் தமது வசனங்கள் மூலம் பரப்பியவா்.

கே.எஸ். அழகிரி, வைகோ, விஜயகாந்த், டிடிவி. தினகரன், கே. பாலகிருஷ்ணன், ஜி.கே.வாசன், ஜவாஹிருல்லா, பொன். ராதாகிருஷ்ணன், நடிகா் விஜய் வசந்த் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்,.

நடிகா் ரஜினிகாந்த்: சின்னக் கலைவாணா், சமூக சேவகா், என்னுடைய நெருங்கிய இனிய நண்பா் விவேக் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாள்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

நடிகா் கமல்ஹாசன்: நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்து விடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவா், செய்தவா் நண்பா் விவேக். முன்னாள் குடியரசுத் தலைவா் கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு.

நடிகா் வடிவேலு : ‘என் நண்பன் விவேக்கின் மறைவுச் செய்தி என்னை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்துல்கலாமுடன் மிகவும் நெருக்கமாக இருந்தாா். சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவா். விவேக் மாதிரி இயல்பாக பேசக் கூடிய நபா் இல்லை. எனக்கான ரசிகா்களில் அவரும் என் ரசிகா். நான் அவருக்கு ரசிகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com