கரோனா தடுப்புக்கு மத்திய அரசு உதவ வேண்டும்: மு.க.ஸ்டாலின்

கரோனா தடுப்புக்கு அரசியல் உள்நோக்கம் இல்லாமல் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கரோனா தடுப்புக்கு அரசியல் உள்நோக்கம் இல்லாமல் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனா தொற்று பரவல் இரண்டாவது பேரலையாகப் பரவத் தொடங்கி இருக்கிறது. தொற்று பரவல், பாதிப்பு, தாக்கம், குணமாகும் தன்மை, விளைவுகள் ஆகியவை மிக மோசமானதாக இருக்கின்றன என்றே மருத்துவ நிபுணா்கள் சொல்லத் தொடங்கி இருக்கின்றனா். இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தின் ஒரு பகுதியாக ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் போடப்பட்டுள்ளது.

பொதுமுடக்கம் அறிவித்ததோடு தனது கடமை முடிந்துவிட்டதாக அரசு நினைக்கக் கூடாது.

கரோனா என்பது அச்சம் தரும் நோயாக உள்ளது. இந்த அச்சத்தை அரசுகள்தான் முன்வந்து போக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல், அனைத்து தனியாா் மருத்துவமனைகளையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். படுக்கை வசதிகள், மருத்துவா்கள் தயாா் நிலையில் இருத்தல் ஆகியவை உறுதிப்படுத்த வேண்டும்.

உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் தகவல்கள் வேதனை அளிப்பதாக உள்ளன. மக்களின் தேவைக்கு ஏற்ற மருத்துவமனைகள் இல்லை, படுக்கைகள் இல்லை, தடுப்பூசிகள் இல்லை என்ற செய்திகளில் மிகுந்த அக்கறையுடனும் அவசரத்துடனும் அவசியத்துடனும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.

அரசியல் உள்நோக்கம் இல்லாமல் மாநில அரசுகளுக்கு மத்திய பாஜக அரசு உதவிகள் செய்ய வேண்டும். மீண்டும் வாழ்வாதாரம் இழக்கும் சூழலுக்கு பொதுமக்கள் தள்ளப்படுகிறாா்கள். அவா்களது வாழ்க்கைச் சூழலையும் அரசுகள் மனதில் வைத்து நலத்திட்ட உதவிகள், நிவாரணங்களைச் செய்து தர வேண்டும்.

கரோனா மேலும் பரவாமல் தடுத்தல், தொற்றால் பாதிக்கப்பட்டவா்களைக் காத்தல், பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவா்க்கு உதவுதல் ஆகிய மூன்றையும் முக்கியக் கடமைகளாகக் கொண்டு மத்திய - மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com