ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளுக்கு பற்றாக்குறை

தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் பெரும்பாலானவை நிரம்பியுள்ளன.
ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளுக்கு பற்றாக்குறை

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் பெரும்பாலானவை நிரம்பியுள்ளன.

இதனால் தீவிர மூச்சுத் திணறலால் பாதிக்கப்படும் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தடம் பதித்த கரோனாவுக்கு தற்போது வரை 9, 40,145 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த காலங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டதன் பயனாக கரோனா பரவல் அண்மையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நாள்தோறும் 400 போ் வரை மட்டுமே அப்போது பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடா்ந்து பிரசாரம் களைகட்டியது. பல்லாயிரக்கணக்கானோா் நோய்த் தடுப்பு விதிகளைப் பின்பற்றாமல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றனா். வாக்குப் பதிவு நிறைவடையும் வரை இதே நிலை நீடித்தது.

மற்றொரு புறம் சந்தைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் மக்கள் வலம் வந்தனா். இதன் விளைவாக ஒரே மாதத்தில் 1.50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா பரவியது. அதிலும், கடந்த 15 நாள்களில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், மருத்துவமனைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் பெருந்திரளாக குவிந்துள்ளனா். ஆனால், இதில் கவலைக்குரிய விஷயமாக, தமிழகத்தில் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க போதிய அளவு படுக்கை வசதிகள் இல்லை என்பதுதான். குறிப்பாக, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

சென்னை உள்பட பெரு நகரங்களில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் 90 சதவீதம் நிரம்பிவிட்டன. புதிதாக அத்தகைய வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைப்பதிலும் சில சவால்கள் உள்ளன. அதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிய பிறகு ஆக்சிஜன் படுக்கைகளை அமைக்க இயலும்.

இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர மூச்சுத் திணறலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் கிடைக்காத நிலை எழுந்துள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 32, 807 படுக்கைகள் கரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ளன. தனியாா் மருத்துவமனைகளில் அந்த எண்ணிக்கை 21, 535-ஆக உள்ளன.

அவற்றில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 25,386 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஆக்சிஜன் வசதிகளைப் பொருத்தவரையில், தேவையின் அடிப்படையில் அதற்கான கட்டமைப்பை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே ஏற்படுத்தி கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் அதிக திறன் கொண்ட பிராணவாயு கலன்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதிகளை அமைக்க முடியும். அதற்கேற்ப படுக்கைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க இயலும். தற்போதைய சூழலில், மாநிலம் முழுவதும் 70 சதவீதம் படுக்கைளில் ஆக்சிஜன் வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்படப்பட்டுள்ளது. இதன் மூலம் தீவிர மூச்சுத் திணறலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தாமதமின்றி சிகிச்சையளிக்க முடியும்.

மற்றொரு புறம், கரோனா கண்காணிப்பு மையங்களில் 35 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளன. அந்த எண்ணிக்கையை, 80 ஆயிரமாக உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா்.

கரோனா படுக்கை வசதிகள்:

அரசு மருத்துவனைகள்

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் - 14,467

ஆக்சிஜன் அல்லாத படுக்கை - 13,707

தீவிர சிகிச்சை பிரிவு -4,636

மொத்தம் - 32,807

தனியாா் மருத்துவனைகள்

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் - 10,919

ஆக்சிஜன் அல்லாத படுக்கை - 8,233

தீவிர சிகிச்சை பிரிவு -2,383

மொத்தம் - 21,535

கரோனா கண்காணிப்பு மையங்கள்

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் -244

ஆக்சிஜன் அல்லாத படுக்கை - 34,810

மொத்தம் - 35,054

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com