தமிழகத்தில் ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் பற்றாக்குறை இல்லை: தமிழக அரசு

தமிழகத்தில் ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர் பற்றாக்குறை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு பதிலளித்துள்ளது.
தமிழகத்தில் ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் பற்றாக்குறை இல்லை: தமிழக அரசு
தமிழகத்தில் ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் பற்றாக்குறை இல்லை: தமிழக அரசு


சென்னை: தமிழகத்தில் ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர் பற்றாக்குறை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு பதிலளித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, வென்டிலேட்டர் தட்டுப்பாடு இருப்பதாக வரும் செய்திகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தியது. அப்போது தமிழக அரசிடம் விளக்கம் பெற்று, இன்று மதியம் தெரிவிக்கும்படி அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயணிடம் தெரிவித்திருந்தது.

அதன்படி, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழகத்தில் மருத்துவ பதற்ற நிலை எதுவும் நிலவவில்லை என்றும் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 400 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனும், புதுச்சேரியில் நாள் ஒன்றுக்கு 150 மெட்ரிக் கடன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதே வேளையில், மருத்துவத் தேவைகளுக்காக தமிழகத்தில் தற்போது நாள் ஒன்றுக்கு 250 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்திலிருந்து ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு 65 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் அனுப்பியதால், மாநிலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 31 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனை பதிவு செய்து கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழகத்தில், ஆக்ஸிஜன், வென்டிலேட்டர், உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும், அவசர காலங்களில் துரிதமாக செயல்பட்டு முடிவெடுக்க அதிகாரம் மிக்க சிறப்புக் குழு அமைக்கவும் உத்தரவிட்டனர்.

மேலும், வழக்கு விசாரணையை ஏப்ரல் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்.

முன்னதாக, தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து தனி நபர்களுக்கு வழங்கப்படுவதாகவும், ஆக்சிஜன் உற்பத்தி போதுமான அளவுக்கு இருப்பதால் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், வெண்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளது எனவும் தமிழ் நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது. 

இந்த செய்தியின் அடிப்படையில்  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. தற்போதைய நிலையில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக. இந்த வழக்கை எடுக்கவில்லை. மற்ற மாநிலங்களில் உள்ள நிலை இங்கு ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தின் நிலையை அறிய விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com