ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரிய வழக்கில் ஸ்டெர்லைட் நிறுவனம் கூடுதல் பிரமாணப்பத்திரம் தாக்கல்

ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரிய வழக்கில் ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. 
ஸ்டெர்லைட்
ஸ்டெர்லைட்

ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரிய வழக்கில் ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. மாசுகட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கவில்லை என்பதால் ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 
இந்நிலையில் நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து அரசுக்கு இலவசமாக விநியோகம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்தது. விசாரணையின்போது, அனுமதி வழங்கலாம் என மத்திய அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் இது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர். 
இவ்வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில்  ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கக் கூடாது. மாநில அரசே ஆக்சிஜன் தயாரிக்க அனுமதித்தால் ஆபத்துகள் ஏற்படலாம். ஆக்சிஜன் தயாரிக்கக் கூடிய நிபுணர்கள் தங்களிடம் மட்டுமே உள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளனர். ஸ்டெர்லைட்டில் மாநில அரசே ஆக்சிஜன் தயாரிக்கலாம் என நீதிமன்றம் யோசனை கூறிய நிலையில் ஆலை நிர்வாகம் இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com