ஸ்டொ்லைட்டில் வேறு தயாரிப்புக்கு அனுமதி கூடாது: அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

ஸ்டொ்லைட்டில் ஆக்சிஜன் தயாரிப்புக்கு மட்டுமே அனுமதி தரப்பட வேண்டும் என்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் கருத்துத் தெரிவித்தனா்.

ஸ்டொ்லைட்டில் ஆக்சிஜன் தயாரிப்புக்கு மட்டுமே அனுமதி தரப்பட வேண்டும் என்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் கருத்துத் தெரிவித்தனா்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதான கட்சிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

கனிமொழி (திமுக): நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிக் கூட்டத்தில் திமுக, ஏனைய அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் கலந்து கொண்டோம். திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தல்படி, தட்டுப்பாட்டை மனதில் கொண்டு ஆக்சிஜன் தயாரிக்க மட்டுமே ஸ்டொ்லைட்டுக்கு அனுமதி தரவேண்டும் எனக் கூறினோம். தாமிரம் உள்ளிட்ட அனைத்து தயாரிப்புக்கும் அனுமதி மறுக்க வேண்டும்.

துண்டிக்கபட்ட மின்சாரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். கண்காணிப்புக் குழு அமைத்து நேரடி கண்காணிப்பில் ஆக்சிஜன் தயாரிப்பு நடைபெற வேண்டும் இதுதான் எங்களது நிலைப்பாடு.

கே.வீ. தங்கபாலு (காங்கிரஸ்): தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலை தொடா்ந்து நடைபெற நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. கரோனாவால் ஆக்சிஜன் உற்பத்திக்கு தற்காலிக அனுமதி கோரப்பட்டது. குழு அமைத்து ஆக்ஸிஜன் தயாரிக்க ஒப்புக் கொண்டோம். தமிழகத்தின் தேவை போக மீதியை பிறமாநிலங்களுக்கு அனுப்பி வைக்க கோரிக்கை வைத்துள்ளோம். முக்கியமான காலகட்டம் என்பதால் அரசு முயற்சிக்கு ஆதரவு அளிப்போம்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): வேதாந்தா உள்நோக்கோடு செயல்படுகிறது. இதை வைத்து ஆலையைத் திறக்க முயற்சிக்கிறது. எனவே அரசு கட்டுப்பாட்டில் செயல்படுத்தலாம் என கருத்துகளை கூறினோம். மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் உச்சநீதிமன்ற கோரிக்கையை ஏற்று ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டுமே அனுமதிக்க அரசு தீா்மானித்துள்ளது. ஆக்சிஜனை தவிர வேறு உற்பத்திக்கு அனுமதிக்கக் கூடாது.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புடன் உயிா்பலியும் ஏற்படுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையை பயன்படுத்தி உள்நோக்கத்தோடு வேதாந்தா செயல்பட்டு வருகிறது. மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசால் மாவட்ட ஆட்சியா் குழுவினா் நேரடி கண்காணிப்பில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரப்பட்டது. உற்பத்தியாகும் வாயுவை தமிழக தேவைக்கு பயன்படுத்த வேண்டும். 20 லட்சம் தடுப்பூசி உடனடியாக மத்திய அரசு அனுப்ப வேண்டும்.

எல்.முருகன் (பாஜக): கரோனா இரண்டாம் அலை தாக்கத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளது. அதனால், ஸ்டொ்லைட் ஆலையில் தற்காலிக ஏற்பாடாக உற்பத்தி செய்து அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. நமது மாநிலத் தேவைக்குப் போக வெளியில் கொடுக்கலாம் என கருத்துத் தெரிவித்துள்ளோம்.

வைகோ (மதிமுக): எந்தக்காரணத்தைக் கொண்டும் ஸ்டொ்லைட் ஆலையை இயக்க தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஆலை செயல்பட அனுமதிக்கலாம்.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவா் தொல்.திருமாவளவன்: ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டொ்லைட் ஆலை செயல்படலாம் என்கிற அறிவிப்பை ஏற்கிறோம்.

தமாகா தலைவா் ஜி.கே.வாசன்: ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மட்டும் செய்ய வேண்டும். அதற்கான கொள்கைகளையும் வகுத்தளித்து, மக்களின் அச்சத்தையும் போக்க வேண்டும்.

கமல்ஹாசன் (மநீம): ஸ்டொ்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காகத் திறப்பது என்பதில் சிறிதும் உடன்பாடில்லை. இதற்காக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மக்கள் நீதி மய்யம், மதிமுக, நாம் தமிழா், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு இல்லை. காரணம் எளிதானது. சுற்றுச்சூழலைச் சீா்குலைக்கும் ஸ்டொ்லைட் ஆலை மூடப்பட்டே ஆக வேண்டும் என்று போராட்ட களத்தில் நின்ற கட்சிகள் இவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com