ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம் 

ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை ஆக்ஸிஜன் தயாரிக்கலாம் என்றும், ஆக்ஸிஜன் தயாரிக்க பிறப்பித்த உத்தரவு ஜூலை 31 வரை அமலில் இருக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம் 
ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம் 


புது தில்லி: ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை ஆக்ஸிஜன் தயாரிக்கலாம் என்றும், ஆக்ஸிஜன் தயாரிக்க பிறப்பித்த உத்தரவு ஜூலை 31 வரை அமலில் இருக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்புப் பணிகளை மேற்பார்வையிட மாவட்ட ஆட்சியர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஆக்ஸிஜன் தயாரிக்கலாம் என்றும், அதன் பிறகு, அப்போதைய சூழலைப் பொறுத்து, தேவைப்பட்டால் மறுஆய்வு செய்யப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நிபந்தனைகளுடன் மேற்கொள்வதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்திருந்தது.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆயிரம் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை சம்மதம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், எஸ். ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது "ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறந்து கொண்டிருக்கும் நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மாநில அரசு ஏன் தன்வசம் எடுத்துக் கொள்ள முடியாது' என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாக தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி .ஒய். சந்திரசூட், எல். நாகேஸ்வர ராவ், எஸ். ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமர்வு, "ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான செயல்பாடுகளை மேற்பார்வையிட ஒரு மேற்பார்வைக் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். இந்தக் குழுவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்டக் கண்காணிப்பாளர், மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர், தூத்துக்குடி உதவி ஆட்சியர் மற்றும் இரண்டு அரசு அதிகாரிகள் இடம் பெற வேண்டும். ஆக்சிஜன் ஆலை செயல்படுத்துவதற்குத் தேவைப்படும் குழுவில் இடம் பெறும் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத ஊழியர்கள் அடங்கிய பட்டியலை வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வேதாந்தா நிறுவனம் அதன் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான செயல்பாட்டை நிகழாண்டு ஜூலை 31-ஆம் தேதி வரை மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு கரோனா தொற்று பரவல் சூழலை நீதிமன்றம் மதிப்பீடு செய்யும்' என்று உத்தரவிட்டது .

அப்போது, ஆலை விவகாரம் தொடர்புடைய பல்வேறு விஷயங்கள் நீதிமன்றத்தின் முன்பு எடுத்து வைக்கப்பட்டன. அதற்கு நீதிபதிகள் அமர்வு, "ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மக்கள் இறந்து கொண்டிருக்கும் ஒரு தேசிய நெருக்கடியை நாம் இன்றைக்கு சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் அரசியல் விஷயமாக ஆக்க முடியாது. ஒரு நீதிமன்றமாக நாங்கள் தேசத்துக்கு ஆதரவளிக்க வேண்டும். இது ஒரு தேசியப் பேரிடர்' என்று தெரிவித்தது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் வல்லுநர்கள் அடங்கிய 3 பேர் குழுவை அமைக்கவும் மத்திய சுற்றுச்சூழல் வனத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில் வேதாந்தா, நெருக்கடியில் பாதிக்கப்பட்ட நபர்கள் கமிட்டியில் இடம் பெறும் இருவரை தேர்வு செய்யலாம். 48 மணி நேரத்துக்குள் அந்த உறுப்பினர்களை பாதிக்கப்பட்டவர்கள் பரிந்துரைக்கத் தவறினால் அந்த உறுப்பினர்களை மாநில அரசே பரிந்துரைக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன், "இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுடன் தமிழக அரசு கூட்டம் நடத்தியது. அப்போது, மாநிலத்தில் பரவி வரும் கரோனா தொற்றை கவனத்தில் கொண்டு வேதாந்தா நிறுவனத்தின் சீலிடப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்குவதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்வதற்கு நான்கு மாதங்கள் அனுமதிக்க முடியும். ஆனால், வேதாந்தா நிறுவனத்தின் மீது மக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லாததன் காரணமாக ஒரு பாதுகாப்பு அவசியமாகிறது. ஆக்சிஜன் ஆலையை மட்டும் மீண்டும் தொடங்குவதற்கு இந்த நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த ஆலை அதன் தாமிர உருக்கு செயல்பாடுகளை தொடங்க அனுமதிக்க முடியாது. அதன் செயல்பாடுகள் அரசின் கண்காணிப்புக் குழுவின் கீழ் இருக்கும். மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் விநியோகத்தில் மாநில அரசுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். உபரியாக இருக்கும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்' என்று வாதிட்டார்.

இதற்கு மத்திய அரசின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆட்சேபம் தெரிவித்தார். அவர் வாதிடுகையில், "ஆக்சிஜன் ஒதுக்கீடு விஷயம் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வருகிறது. ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான வசதி இருக்கிறது. அந்த வசதி பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்பதுதான் கவலை. உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் மத்திய அரசுக்கு வழங்கப்பட வேண்டும். அவை ஒவ்வொரு மாநிலங்களுக்கும் கூட ஒதுக்கப்பட வேண்டும். மாநிலங்கள் வாரியாக ஒதுக்கீடு செய்வதற்காக ஆக்சிஜன் மத்திய அரசுக்கு கொடுக்கப்பட வேண்டும்' என்றார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்ந்த அமைப்பின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கோலின் கோன் சால்வேஸ் வாதிடுகையில், "ஆக்சிஜன் உற்பத்தி யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், மனுக்களின் வரலாறானது வேதாந்தா நிறுவனம் ஆலையை மீண்டும் செயல்படுத்த பல தடவை முயற்சித்தது என்பதைத்தான் காட்டுவதாக உள்ளது' என்றார். இதையடுத்து, நீதிபதிகள், "நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கவில்லை. அந்த ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மீண்டும் செயல்படுத்துவது தொடர்பான விவகாரத்தை மட்டுமே விசாரிக்கிறோம். ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான உள்ளூர் மக்களின் கவலையையும் அறிந்துள்ளோம்' என்றனர்.

தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் பாலாஜி ஸ்ரீநிவாசன் தெரிவிக்கையில், "ஆக்சிஜன் உற்பத்தி செயல்பாடுகளை மேற்பார்வையிடும் குழுவில் உள்ளூரை சேர்ந்த மக்களும் உறுப்பினர்களாக இடம் பெற வேண்டும் என்ற தேவை எழுந்துள்ளது''என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com