மானாமதுரையில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை மூட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

 மானாமதுரையில் மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதி இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டு வழிபாட்டிற்கு திறக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை மூடுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
முறையான அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ தேவாலயம்
முறையான அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ தேவாலயம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் முத்துமாரியம்மன் கோயில் அருகே மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதி இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டு வழிபாட்டிற்கு திறக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை மூடுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த புதன்கிழமை மாலை உத்தரவிட்டுள்ளது.

மானாமதுரையில் சிவகங்கை ரோட்டில் தயாபுரம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் கட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள்  சார்பில் இந்த தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கட்டுமான பணிகள் தொடர்ந்ததால் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினரான மானாமதுரையைச் சேர்ந்த மாரிமுத்து மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்தார்.

அதில் மானாமதுரை தயாபுரம் பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் அருகே மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு வரும் கிறிஸ்தவ தேவாலயத்தின் கட்டுமான பணிகளை நிறுத்த உத்தரவிட வேண்டுமென கூறியிருந்தார்.

இந்த வழக்கில் ஆஜராகி விளக்களித்த அரசு தரப்பு ஏற்கனவே தேவாலயம் கட்டுமான பணிகள் முடிந்து வழிபாட்டிற்கு தேவாலயம் திறக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தது.

அதைத்தொடர்ந்து மானாமதுரை ஒன்றியம் கல்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் இந்த வழக்கில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இதையடுத்து கல்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் யாஸ்மின் இந்த வழக்கு விசாரணையில் காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளித்தார்.

அவர் கூறுகையில் ஏற்கனவே உள்ளாட்சி அமைப்பு அதிகாரத்தில் இல்லாதபோது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட அனுமதியை தொடர்ந்து கட்டுமான பணிக்கான காலக்கெடுவை நீட்டித்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இது தவறு தான் என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் டிஎஸ் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

ஆட்சேபனை இல்லாத இடத்தில் வழிபாடு நடத்தலாம். மானாமதுரை தயாபுரம் பகுதியில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள புதிய கிறிஸ்தவ தேவாலயத்திற்கு கட்டுமான பணிக்கு அனுமதி அளிக்க ஊராட்சி நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை.

மாவட்ட நிர்வாகம் தான் அனுமதியளிக்க வேண்டும் எனவே தேவாலயத்தின் நிர்வாக தரப்பினர் கிறிஸ்தவ தேவாலயத்தை உடனே மூட வேண்டும். இல்லையென்றால் மானாமதுரை வட்டாரவளர்ச்சி அலுவலர் மூட வேண்டும்

அதன்பின் நிர்வாகத்தினர்  ஒரு வார காலத்துக்குள் மாவட்ட ஆட்சியரிடம் முறையாக தேவாலய கட்டுமானத்திற்கு விண்ணப்பித்து அதனடிப்படையில் ஆட்சியர் 10 நாள்களுக்குள் விண்ணப்பத்தை பரீசிலித்து தகுந்த முறையில்  உத்தரவு பிறப்பிக்கலாம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com