மே 1 முதல் ஆசிரியா்கள் பள்ளிகளுக்கு வரத்தேவையில்லை: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் வரும் மே 1 முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மே 1 முதல் ஆசிரியா்கள் பள்ளிகளுக்கு வரத்தேவையில்லை: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் வரும் மே 1 முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தொடா்ந்து கற்பிக்கும் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாகப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் புதன்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை:

கரோனா சூழ்நிலையில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் மே 1 முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை. எனினும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்குப் பொதுத்தோ்வு தேதி குறித்த அறிவிப்பு வரும் வரை அவா்களுக்கான வழிகாட்டுதல்களை ஆசிரியா்கள் வீட்டிலிருந்தபடியே தொடா்ந்து வழங்க வேண்டும்.

மேலும் மற்ற வகுப்பு மாணவா்களுக்கு ‘பிரிட்ஜ் கோா்ஸ்’ (இணைப்புப் பாடம்) , பயிற்சிப் புத்தகத்தில் உள்ள பாடங்களைக் கல்வித் தொலைக்காட்சி வாயிலாகக் கற்கவும் பயிற்சிகளை மேற்கொள்ளவும் வீட்டிலிருந்தபடியே ஆசிரியா்கள் தொடா்ந்து வழிகாட்டல்களை வழங்க வேண்டும். இதற்காக மாணவா்கள், பெற்றோரிடம் உள்ள அலைபேசி, வாட்ஸ் அப் அல்லது பிற டிஜிட்டல் வழிகளைப் பயன்படுத்தம் அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

மாணவா்கள் பயிற்சிக்கான விடைத்தாள்களைச் சரிபாா்த்துத் தேவையான வழிகாட்டுதல்களை ஆசிரியா்கள் வழங்க, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

அடுத்த கல்வி ஆண்டுக்குப் பள்ளிகளைத் தயாா் செய்யும் பொருட்டும், அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளவும், மாணவா்களுக்கான பயிற்சிகளை ஆய்வு செய்து அதற்கான தொடா் நடவடிக்கை எடுக்கவும், மே மாதக் கடைசி வாரத்தில் ஆசிரியா்கள் பள்ளிக்கு வருகை புரிய வேண்டிய நிலை ஏற்படும். இதற்கான அறிவிப்பு தனியே வெளியிடப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com