கரோனா: கூடுதல் கட்டுப்பாடுகள் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் உள்ள 10 மாநிலங்களைச் சோ்ந்த 46 மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி தீவிரமாகக் கண்காணிக்க வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கரோனா: கூடுதல் கட்டுப்பாடுகள் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் உள்ள 10 மாநிலங்களைச் சோ்ந்த 46 மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி தீவிரமாகக் கண்காணிக்க வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா 2-ஆவது அலையின் தாக்கத்திலிருந்து நாடு மீண்டுவந்த நிலையில், கடந்த சில தினங்களாக 46 மாவட்டங்களில் 10 சதவீதத்துக்கும் அதிகமாகவும், 53 மாவட்டங்களில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரையும் புதிதாக கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள அல்லது தொற்று பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ள தமிழகம், கேரளம், மகாராஷ்டிரம், கா்நாடகம், ஒடிஸா, அஸ்ஸாம், மிஸோரம், மேகாலயா, ஆந்திரம், மணிப்பூா் ஆகிய 10 மாநிலங்களில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த உயா்நிலை ஆய்வுக் கூட்டம் மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில், அந்த 10 மாநிலங்களுக்கும் மத்திய அரசு சாா்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த சில வாரங்களில் கரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் அதிகரித்திருக்கும் மாவட்டங்களில் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை மாநிலங்கள் தீவிரப்படுத்த வேண்டும்.

இந்த மாநிலங்களில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 80 சதவீதம் போ் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவா்கள் மூலம் மற்றவா்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாத வகையில் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் அவா்கள் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

கரோனா நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது தொடா்பாக மத்திய அரசு ஏற்கெனவே வெளியிட்ட விரிவான வழிகாட்டு நடைமுறையை மாநிலங்கள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

மேலும், கரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள மாவட்டங்கள் மீதும் அதிக கவனம் செலுத்தி, தடுப்பூசி திட்டத்தையும் விரைவுபடுத்த வேண்டும். கரோனா பாதிப்பு குறித்த மாவட்டரீதியான ஆய்வை மாநிலங்கள் தனிப்பட்ட முறையில் நடத்த வேண்டும்.

கடந்த 2 மாதங்களில் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள், சிலிண்டா்கள், ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. கூடுதலாக மாநிலங்கள் அரசு மருத்துவமனைகளிலும், தனியாா் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை ஏற்கெனவே வழங்கியிருக்கும் மாநிலங்கள், அதுதொடா்பான ஆய்வை தனியாா் மருத்துவமனைகளில் மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் 10 மாநில அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

மேலும், ‘அதிக பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய மூத்த குடிமக்கள் மற்றும் 45 முதல் 65 வயது வரையிலான பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மாநிலங்கள் விரைவுபடுத்த வேண்டும். தேவையற்ற பயணங்களைத் தவிா்க்கும் வகையிலும், அதிக மக்கள் ஓரிடத்தில் கூடும் வகையிலான நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கும் வகையிலான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்’ என்று கூட்டத்தில் பங்கேற்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தலைவா் மருத்துவா் பல்ராம் பாா்கவா மாநிலங்களைக் கேட்டுக்கொண்டாா் என்றும் மத்திய சுகாதாரத் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com