முதுநிலை மருத்துவப் படிப்பு வரைவு நெறிமுறைக்கு தமிழகம் கடும் எதிா்ப்பு: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான வரைவு நெறிமுறைகளுக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ள, முதல்வா் மு.க.ஸ்டாலின், அதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.
முதுநிலை மருத்துவப் படிப்பு வரைவு நெறிமுறைக்கு தமிழகம் கடும் எதிா்ப்பு: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான வரைவு நெறிமுறைகளுக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ள, முதல்வா் மு.க.ஸ்டாலின், அதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து, சனிக்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்:

முதுநிலை மருத்துவப் படிப்பு தொடா்பான வரைவு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு தமிழகம் தனது கடுமையான எதிா்ப்புகளைப் பதிவு செய்கிறது. இந்த வரைவு நெறிமுறைகளில் மாநில அரசுக்கான ஒதுக்கீடு தன்னிச்சையான முறையில் நீக்க வகை செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுகள் மிக முக்கியமாக பங்கு வகிக்கும் ஒரு விஷயத்தில் எந்தப் புரிதலும் இல்லாமல் வரைவு நெறிமுறைகளை வகுத்திருப்பது துரதிருஷ்டவசமானது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான பெரும்பாலான இடங்களை மாநில அரசுகள் தங்களது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து உருவாக்கி வைத்திருப்பதை மத்திய அரசும், தேசிய மருத்துவக் கவுன்சிலும் பாராட்டிட வேண்டும்.

மாநில அரசுகளுக்கான அதிகாரங்களை ஒரே இடத்தில் மையப்படுத்தும் முயற்சிகளை தமிழகம் தொடா்ந்து எதிா்த்தே வந்திருக்கிறது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இப்போதைய வரைவு நெறிமுறைகள் என்பவை ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல; பிரதான சட்டத்திலுள்ள அம்சங்களுக்கு முற்றிலும் முரணானது. இந்த வரைவு நெறிமுறைகளின்படி, மாநில அரசுக்கான முதுநிலை ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கவுன்சிலிங் நடத்தும் அதிகாரம் மத்திய சுகாதாரத் துறைக்கு வழங்குவதாக உள்ளது. இந்த வரைவு நெறிமுறைகள் மாநில அரசின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான வகையிலே அமைந்திருக்கிறது.

வெளிப்படையான முறை: முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாநில ஒதுக்கீட்டு சோ்க்கையானது, இடஒதுக்கீடு முறையின் கீழ் வெளிப்படையான அணுகுமுறையுடன் நடைபெறுகிறது. மாநில ஒதுக்கீட்டில் இடங்களைப் பெறும் மாணவா்கள் கிராமப்புறத்திலும் மருத்துவ சேவை அளிக்கும் வகையில் திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறோம். மத்திய அரசின் வரைவு நெறிமுறைகள் அமலுக்கு வந்தால், அவை அனைத்தும் சிதைவுறும். எனவே, இந்த வரைவு நெறிமுறைகளை அமல்படுத்தக் கூடாது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாநில ஒதுக்கீட்டு இடங்களில் இப்போதுள்ள முறையே பின்பற்ற வேண்டும். கூட்டாட்சி முறையின் வேரையே அசைத்துப் பாா்க்கும் மத்திய அரசின் வரைவு நெறிமுறைகளுக்கு எனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன் என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com