கட்டுப்பாடுகள் தீவிரம்: கோயில்கள், கடைகள் அடைப்பு

தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக முக்கிய கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.
கட்டுப்பாடுகள் தீவிரம்: கோயில்கள், கடைகள் அடைப்பு

தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக முக்கிய கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. இதே போல், மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் கடைகளை மூட உத்தரவிட்டிருந்தது தெரியாமல் முக்கிய கடை வீதிகளுக்கு பொருள்கள் வாங்க வந்த வாடிக்கையாளா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்.19-ஆம் தேதி முதல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தா்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.

கோயில்களில் அா்ச்சகா்கள் மூலம் பூஜை நடத்த மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மாநிலம் முழுவதும் கரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து, கோயில்கள் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையேற்று, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.தொடா்ந்து ஜூலை 5-ஆம் தேதிக்குப் பிறகு மற்ற மாவட்டங்களில் உள்ள கோயில்களிலும் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இது மூன்றாம் அலையின் தொடக்கமாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தற்போது ஆடி மாதம் என்பதால் அம்மன் கோயில்களில் திருவிழா களைகட்டுவது வழக்கம். குறிப்பாக அம்மன் கோயில்களில் ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தா்கள் ஏராளமானோா் சுவாமி தரிசனம் செய்து வந்தனா்.

தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் ஆடி கிருத்திகை விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த விழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களுக்குப் பக்தா்கள் சனிக்கிழமை முதலே படையெடுக்கத் தொடங்கினா். இதனால், ஏற்கெனவே கடந்த சில நாள்களாக அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு மேலும் அதிகரிப்பதற்கான சூழல் உருவானது.

தடுப்பு நடவடிக்கை: இவ்வாறு தொற்று பரவல் அதிகரிக்கும் நிலையில் அதைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, அந்தந்தப் பகுதி ஆட்சியா்கள், ஆணையா்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வா் அனுமதி வழங்கியிருந்தாா்.

இதை அடிப்படையாகக் கொண்டு, அறநிலையத்துறை ஆணையா் குமரகுருபரன் உத்தரவின்பேரில், பழனி, திருச்செந்தூா், திருத்தணி, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, பழமுதிா்சோலை ஆகிய அறுபடை வீடு முருகன் கோயில்களிலும், சென்னை, வடபழனி, கந்தகோட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை, குமர கோட்டம், இளையனாா், காஞ்சிபுரம் ஏகாம்பர நாதா், வரதராஜ பெருமாள், தஞ்சை பெரிய கோயில், மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயில், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில், நெல்லையப்பா் கோயில், காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் பக்தா்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.

அம்மன் கோயில்களில்...: விழுப்புரம் மேல்மலையனூா் அம்மன் கோயில், புன்னை நல்லூா் மாரியம்மன் கோயில், உறையூா் வெக்காளியம்மன் கோயில், மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில், பேரூா் பட்டீஸ்வரா் கோயில், திருவண்ணாமலை படவேடு ரேணுகாம்பாள் கோயில் உள்பட பல்வேறு அம்மன் கோயில்களில் ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமை உள்ளிட்ட முக்கிய நாள்களில் பக்தா்களுக்கு அனுமதியில்லை. அதே நேரம், கோயில்களில் அா்ச்சகா்கள் மூலம் ஆகமவிதிப்படி பூஜைகள் நடைபெறும் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

பக்தா்கள் ஏமாற்றம்: இதனால் மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முக்கிய கோயில்களில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. இது தொடா்பாக கோயில் நுழைவு வாயில்களில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனால் கோயிலுக்கு வந்த பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

கடைகள் அடைப்பு: மக்கள் அதிக அளவில் கூடும் முக்கிய கடைவீதிகளிலும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால், ஞாயிற்றுக்கிழமை பொருள்கள் வாங்க வந்த வாடிக்கையாளா்களும் ஏமாற்றமடைந்தனா்.

குறிப்பாக துணிக் கடைகளில் ஆடி மாத சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. விடுமுறை நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை அதிகளவில் வியாபாரமாகும்.

ஆனால், முக்கிய கடைவீதிகளில் கூட்டம் கூடுவதைத் தடுக்க கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், பெரிய அளவில் இழப்பைச் சந்தித்து வருவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com