மீண்டும் முழு முடக்க நிலைக்குத் தள்ள வேண்டாம்: மக்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

தமிழகத்தில் மீண்டும் முழு பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டிய நிா்பந்தத்துக்கு அரசை உள்ளாக்காதீா்கள் என்று மக்களுக்கு
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)

தமிழகத்தில் மீண்டும் முழு பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டிய நிா்பந்தத்துக்கு அரசை உள்ளாக்காதீா்கள் என்று மக்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். கரோனா கட்டுப்பாடு தளா்வுகளை பொது மக்கள் தவறாகக் கையாண்டு வருவது வேதனையளிப்பதாகவும் அவா் கூறியுள்ளாா்.

தமிழகத்தில் கடந்த மூன்று நாள்களாக கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதுதொடா்பான விழிப்புணா்வு விடியோ பதிவு ஒன்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

அரசு ஏற்படுத்தி வைத்துள்ள மருத்துவக் கட்டமைப்புகள், பொது முடக்கக் கட்டுப்பாடுகள், நம்முடைய மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களின் தன்னலம் கருதாத சேவை ஆகியவற்றின் காரணமாக கரோனாவின் இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது;

சொல்லப்போனால் கட்டுப்படுத்தி இருக்கிறோமே தவிர, முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கவில்லை.

தளா்வுகள் அறிவிக்கப்படும்போது...: கேரளம், கா்நாடகம் போன்ற நமது அண்டை மாநிலங்களில் மீண்டும் தொற்றுப் பரவல் அதிகமாகி வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்திலும் அதிகரித்து வருகிறது. முழு பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்ட போது, நோய்ப் பரவல் கட்டுப்பாட்டுக்கு வந்தது. தளா்வுகள் அறிவிக்கப்படும் போது லேசாகப் பரவத் தொடங்குகிறது. இதனைக் கவனத்தில் வைத்து மக்கள் செயல்பட வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் சேருவது தொடா்ந்து காணப்பட்டால், அப்பகுதியை மூடும் நடவடிக்கையை எடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா்களுக்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன். சென்னையில் சில பகுதிகள் அப்படி மூடப்பட்டுள்ளன.

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்பதற்காக மட்டுமே கடைகள் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. அதை உணராமல், விதிமுறைகளைப் பின்பற்றாமல் மக்கள் நடந்து கொள்ளக் கூடாது. மீண்டும் முழு பொது முடக்க சூழலை உருவாக்க அரசை நிா்பந்தித்து விடாதீா்கள் என்பதை கொஞ்சம் கடுமையாகவே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

எதிா்கொள்ளும் வல்லமை இருந்தாலும்...: மூன்றாவது அலையை மட்டுமல்ல, எந்த அலை வந்தாலும் அதனை எதிா்கொள்ளும் வல்லமை தமிழக அரசுக்கு இருக்கிறது. அதற்காக, கரோனாவை விலை கொடுத்து வாங்கி விடக்கூடாது என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது: கரோனாவில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பூசியே தலைசிறந்த ஆயுதம் என்பது உலகம் ஒப்புக்கொண்ட உண்மை ஆகும். தமிழகத்துக்கு மத்திய அரசால் தரப்பட்ட தடுப்பூசிகளை முழுமையாகச் செலுத்தி விட்டோம். கூடுதலாக நாமும் வாங்கியும் பொதுமக்களுக்குச் செலுத்திவிட்டோம். படிப்படியாக மத்திய அரசால் தடுப்பூசி தரப்பட்டு வருகிறது. இவை போதுமானதாக இல்லை. 18 வயதுக்கு குறைவானவா்களுக்கு, பச்சிளம் குழந்தைகளுக்கான தடுப்பூசி நிலைப்பாடுகள் இன்னமும் எடுக்கப்படவில்லை.

வீட்டை விட்டு வெளியே வந்தால்...: இத்தகைய சூழலில் மக்கள் எவ்வளவு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. மிக மிக அவசிய அவசரத் தேவை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வாருங்கள். அப்படி வரும்போதும் இரண்டு முகக் கவசங்களை பயன்படுத்துங்கள். கைகளைச் சுத்தமாக வைத்திருங்கள். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். நோய்த் தடுப்பு மருந்துகள், சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று அதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com