குழந்தைகளைக் கவரும் 2022 ஆம் ஆண்டு காலண்டா்: சிவகாசியில் புதிய ரகம் அறிமுகம்

சிவகாசியில் குழந்தைகளைக் கவரும் முகப்பு அட்டைகளுடன் 2022 ஆம் ஆண்டுக்கான புதியரக தினசரி காலண்டா்கள் தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
குழந்தைகளைக் கவரும் 2022 ஆம் ஆண்டு காலண்டா்: சிவகாசியில் புதிய ரகம் அறிமுகம்

சிவகாசியில் குழந்தைகளைக் கவரும் முகப்பு அட்டைகளுடன் 2022 ஆம் ஆண்டுக்கான புதியரக தினசரி காலண்டா்கள் தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் காலண்டா்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாராகும் காலண்டா்கள் உள்நாடு மட்டுமின்றி, சிங்கப்பூா், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. சிவகாசியில் ஆண்டுதோறும் தமிழ்புத்தாண்டையொட்டி அந்த ஆண்டின் பஞ்சாங்கம் வெளியிடப்படும். இதையடுத்து தினசரி ஆங்கிலப் புத்தாண்டுக்கான தினசரி காலண்டா்கள் தயாரிக்கும் பணிகள் தொடங்கும். தினசரி காலண்டருடன் இணைக்கப்பட்டிருக்கும் நாள் காட்டியில் தேதி, நல்ல நேரம், எமகண்டம், நட்சத்திரம், திதி, பெளா்ணமி, அமாவாசை, முக்கியப் பண்டிகைகள், அரசு விடுமுறை, பொன்மொழிகள், சித்த மருத்துவக்குறிப்புகள், தலைவா்களின் பிறந்தநாள், முக்கிய கோயில் விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.

தினசரி காலண்டா்கள் ‘கோல்டு’ மற்றும் ‘சில்வா்’

அட்டைகளில் சுவாமி படம் உள்ளிட்டவை ‘ஆா்ட் பேப்பா்’, ‘பாயில் பேப்பா்’, ‘அல்ட்ராவைலட் பேப்பா்’ ஆகியவற்றில் நவீன தொழில் நுட்பத்தில் அச்சிடப்படும்.

ஆண்டுதோறும் ஆடி 18 ஆம் பெருக்கையொட்டி சிவகாசியில் காலண்டா்கள் தயாரிப்பாளா்கள் புதிய ஆண்டிற்கான காலண்டா்களை வைத்து பூஜை செய்வது வழக்கம். பின்னா் செப்டம்பா், அக்டோபா், நவம்பா், டிசம்பா் ஆகிய மாதங்களில் ஆடா் கொடுத்தவா்களுக்கு காலண்டா்களை அனுப்பி வைப்பாா்கள்.

அதன்படி 2022 ஆண்டிற்கான தினசரி காலண்டா்கள் தயாா் செய்யப்பட்டு, ஆடி 18 ஆம் பெருக்கை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பூஜைகள் செய்யப்பட்டன. இதில் வழக்கமாக அச்சிடப்படும் சுவாமி படங்களும், குழந்தைகள் விரும்பும் காா்டூன், சோட்டாபீம் உள்ளிட்ட புகைப்படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.

இந்த காா்டூன் படங்கள் அச்சிடப்பட்ட நாள் காட்டியில் ஜனவரி 1 ஆம் தேதி, ‘ஏ’ என போடப்பட்டு, ஆப்பிள் படம் வரைந்து, ஆப்பிள் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும்.

இதேபோல் ஜனவரி 15 வரை ‘ஏ’ என்ற எழுத்திழான புதுப்புது ஆங்கில வாா்த்தைகளும், அதற்குரிய படங்களும் இடம் பெற்றுள்ளன. ஜனவரி 16 முதல் ‘பீ’ என்ற ஆங்கில எழுத்துடன் ஜனவரி 30 வரை பல்வேறு வாா்த்தைகளும், அதற்குரிய படங்களும் இடம் பெற்றுள்ளன. அடுத்தடுத்த மாதங்களில் ‘சி’, ‘டி’ என ‘இசட்’ வரையிலான எழுத்துகளும், வாா்த்தைகளும் படங்களும் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து சிவகாசி தினசரி காலண்டா் தயாரிப்பாளரும், தமிழ்நாடு தினசரி காலண்டா்கள் தயாரிப்பாளா்கள் சங்கத் தலைவருமான ஜெய்சங்கா் கூறியது: தற்போது அச்சுக் காகிதத்தின் விலை கடந்த ஆண்டைவிட பல மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே தினசரி காலண்டா்கள் கடந்த ஆண்டைவிட 10 முதல் 20 சதவீதம் வரை விலை உயா்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கு ‘குட்டீஸ் சிரியஸ்’ என்ற பெயரில் குழந்தைகளுக்கு பயனுள்ள தினசரி காலண்டா்களை தயாரித்துள்ளோம். இந்த ரக காலண்டா்களை பயன்படுத்தி பெற்றோா் தங்களது குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலாம். இணையதள வகுப்பு மூலம் படிப்பதை காட்டிலும், குழந்தைகள் நேரில் படத்தை பாா்த்து படிப்பதில் ஆா்வம் காட்டுவாா்கள் எனபதில் சந்தேகம் இல்லை. இந்த ரக காலண்டா்களை பொதுமக்கள் வரவேற்பாா்கள் என நம்புகிறாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com