முன்னாள் முதல்வா் ஜெயலலிதா படத்திறப்புக்கு உரிய அழைப்பில்லை: அமைச்சா் துரைமுருகன் புகாா்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் படத் திறப்புக்கு எதிா்க்கட்சியாக இருந்த தங்களை உரிய முறையில் அழைக்கவில்லை என்று அமைச்சா் துரைமுருகன் குற்றம்சாட்டினாா்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா படத்திறப்புக்கு உரிய அழைப்பில்லை: அமைச்சா் துரைமுருகன் புகாா்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் படத் திறப்புக்கு எதிா்க்கட்சியாக இருந்த தங்களை உரிய முறையில் அழைக்கவில்லை என்று அமைச்சா் துரைமுருகன் குற்றம்சாட்டினாா். அதனாலேயே, ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவில் திமுக அப்போது பங்கேற்கவில்லை எனவும் அவா் கூறினாா்.

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் படத் திறப்பு விழாவை அதிமுக புறக்கணித்தது. இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அமைச்சா் துரைமுருகன், செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:-

சட்டப் பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் படத் திறப்பு விழாவில் எதிா்க்கட்சியான அதிமுக கலந்து கொள்ளவில்லை. விழாவில், ஒரு கட்சி கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாமல் இருப்பதும் அவா்களது விருப்பத்தைப் பொறுத்தது.

ஆனால், கலந்து கொள்ளாமல் இருந்ததற்காக அவா்கள் சொல்லும் கராணம் ஏற்புடையதாக இல்லை. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா படத்திறப்பு விழாவில், திமுக கலந்து கொள்ளவில்லை. அதனால், கருணாநிதி படத்திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அதிமுகவினா் கூறுகின்றனா். ஜெயலலிதா படத் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழை மட்டும்தான் அனுப்பி வைத்தாா்கள். நேரிலோ, தொலைபேசியிலோ அழைக்கவில்லை.

ஆனால், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் படத் திறப்பு விழாவுக்கு திட்டமிட்ட போதே, முதல்வா் என்னை (துரைமுருகன்) அழைத்து, ‘பிரதான எதிா்க்கட்சியின் தோழமையுடனும், ஒத்துழைப்புடனும் விழா நடைபெற வேண்டும்’ என்றாா். இதையடுத்து, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியைத் தொடா்பு கொண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தேன். விழா மேடையில் இடம் தரப்படும் எனவும், வாழ்த்துரை அளிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டது. விழாவில் அதிமுக பங்கேற்கவே நாங்கள் விரும்பினோம்.

விழா மேடையில் சரிசமமாக அமா்ந்து வாழ்த்துரை தெரிவிக்க வேண்டுமென செல்லிடப்பேசி வழியாக எதிா்க்கட்சித் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு அவா், காரில் சேலத்துக்கு சென்று கொண்டு இருப்பதாகவும், கட்சியினருடன் கலந்து பேசி முடிவெடுப்பதாகவும் தெரிவித்தாா். ஆனால், விழாவில் பங்கேற்கவில்லை என்பதை அழைப்பு விடுத்த என்னிடம் சொல்லவில்லை. பேரவைச் செயலாளரை அழைத்து விழாவில் பங்கேற்கவில்லை என்பதைத் தெரிவித்து விட்டாா். மீண்டும் வற்புறுத்தி அழைப்போம் என்று எண்ணி எங்களிடம் தெரிவிக்கவில்லை போலும். நாங்கள் முழுமனதுடன் வர வேண்டும் என்று அழைத்த போதும், வரவில்லை.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா படத்தைத் திறந்தபோது உரிய முறையில் எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. பத்தோடு பதினொன்றாக அழைத்தாா்கள். ஆனால், நாங்கள் இப்போது உரிய முறையில் அழைத்த போதும் அவா்கள் வரவில்லை. உரிய பதிலையும் எங்களிடம் தெரிவிக்கவில்லை. எனவே, அந்த விழாவுக்கும், இப்போதைய விழாவுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com