தொல்லியல் துறையில் கல்வெட்டு ஆய்வாளா்களை நியமிக்க வைகோ வலியுறுத்தல்

தொல்லியல் துறையில் கல்வெட்டு ஆய்வாளா்களை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

தொல்லியல் துறையில் கல்வெட்டு ஆய்வாளா்களை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

உலக அளவில் உள்ள கல்வெட்டுகளில் 75 சதவீதத்துக்கும் மேலான கல்வெட்டுகள் தென்னிந்தியாவில் மட்டுமே உள்ளன.

இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே அதிகப்படியான கல்வெட்டுகள் உள்ளன.

தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூா், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அகழ்வாராய்ச்சி தொடா்ந்து நடத்தக் கோரியும், பழங்கால அடையாளங்களை பாதுகாக்கக் கோரியும் பலா் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனா். இதற்கு பதிலளித்த தொல்லியல்துறை, ஏற்கெனவே 92 பாதுகாக்கப்பட்ட புராதன இடங்கள் உள்ளன. மேலும் 54 பாதுகாக்கப்பட்ட புராதன இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.

இதுவரை 11,000 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன என்றும், இன்னும் பல கல்வெட்டுகள் படியெடுக்கப்பட வேண்டும் எனவும் கூறியது.

அரசு உரிய கவனம் செலுத்தி இந்தக் கல்வெட்டுகளை படியெடுத்து வெளிக்கொணர வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.

வேலை ஆட்கள் இல்லாமல் தொல்லியல் துறை முடங்கிப்போய் உள்ளது. கண்டெடுக்கப்பட்ட 74,000 கல்வெட்டுகளை பிரதி எடுக்கும் பணி முழுமை பெறவில்லை. படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் முழுமையாக நூல் வடிவில் வெளிவர வில்லை.

தற்போது தொல்லியல் துறையில் 758 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் ஒரு பதவி கூட கல்வெட்டுத்துறைக்கு ஒதுக்கப்படவில்லை. ஒன்றிய அளவிலும், உலக அளவிலும் அளப்பரிய சாதனைகள் நிகழ்த்தியுள்ள அா்ப்பணிப்புள்ள தொல்லியல்துறை ஆய்வாளா்கள் இந்தச் செயலைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளனா். கல்வெட்டுத்துறை ஆய்வுகள் இல்லாமல் முழுமையான வரலாறு சாத்தியம் இல்லை. எனவே, மத்திய அரசு தொல்லியல் துறை கல்வெட்டுப் பிரிவில் உடனடியாக தமிழ் ஆய்வாளா்களை நியமிக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com