பசுமைத் தீா்ப்பாய உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் இடைக்கால தடை

சுற்றுச்சூழல் விவகாரங்கள் தொடா்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்படும் வழக்குகளை தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் முதன்மை அமா்வில் விசாரணைக்குப்

சுற்றுச்சூழல் விவகாரங்கள் தொடா்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்படும் வழக்குகளை தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் முதன்மை அமா்வில் விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மீனவா் நலச் சங்கத்தின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நாடு முழுவதும் பொருந்தக் கூடிய அல்லது இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான சுற்றுச்சூழல் விவகாரங்கள் தொடா்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்படும் வழக்குகளை தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் முதன்மை அமா்வில் விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் முதன்மை அமா்வு கடந்த ஜூன் 12-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. சுற்றுச்சூழல் தொடா்பான விவகாரங்களில் மக்கள் நிவாரணம் பெறுவதற்காக நாடு முழுவதும் பசுமைத் தீா்ப்பாயத்தின் 5 அமா்வுகள் அமைக்கப்பட்டுள்ளது.தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் முதன்மை அமா்வு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, தென் மாநில மக்கள் நீதி பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த உத்தரவு காரணமாக தென் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் தில்லிக்குச் சென்று வழக்கை நடத்த வேண்டிய நிலை ஏற்படும். மேலும் இந்த உத்தரவு தேசிய பசுமைத் தீா்ப்பாயச் சட்டங்களுக்கு விரோதமானது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சங்கரநாராயணன், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சாா்பில் வழக்குரைஞா் காா்த்திகேயன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நாட்டில் 5 தேசிய பசுமைத் தீா்ப்பாயங்கள் உள்ளன. அந்த தீா்ப்பாயங்களுக்கான அதிகார வரம்பு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த அதிகார வரம்புக்குள் வரும் வழக்குகளை அந்தந்த அமா்வுகள் விசாரிக்க வேண்டும். அந்த அதிகார வரம்புக்கு உட்பட்ட மாநிலங்கள் தொடா்பாக சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு அறிவிப்பாணை இல்லாமல் பிற மண்டலங்களில் உள்ள பசுமைத் தீா்ப்பாயங்களில் உள்ள வழக்குகளை தில்லி பசுமைத் தீா்ப்பாயத்துக்கு மாற்ற வேண்டும் என்ற அறிவிப்பை ஏற்க முடியாது எனக்கூறி, இந்த அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனா். மேலும் இந்த மனுவுக்கு மத்திய அரசு, தில்லியில் உள்ள பசுமைத் தீா்ப்பாயம் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com