கருணாநிதி நினைவு தினம்: பெரு விழாக்கள் வேண்டாம் - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவு தினத்தன்று பெருவிழாக்கள், ஒலிபெருக்கிகளைத் தவிர்த்திடுவீர் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக்கெ
கருணாநிதி நினைவு தினம்: பெரு விழாக்கள் வேண்டாம் - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்


சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவு தினத்தன்று பெருவிழாக்கள், ஒலிபெருக்கிகளைத் தவிர்த்திடுவீர் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

ஆகஸ்ட் 7. ஒவ்வொரு உடன்பிறப்பின் இதயமும் தகர்ந்தது போன்ற உணர்வுடன் கண்ணீர் பெருக்கெடுத்த நாள். எதையும் தாங்கும் இதயம் கொண்ட பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்ற - வைர நெஞ்சம் கொண்ட தலைவர் கருணாநிதி அவர்களை இயற்கை சதிசெய்து நம்மிடமிருந்து பிரித்த - பறித்த நாள். உடலால் அவர் பிரிந்தாலும் உடன்பிறப்புகள் மற்றும் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

இயற்கையின் கரங்கள் கொய்து சென்ற நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதிக்கு இது மூன்றாம் ஆண்டு நினைவேந்தல். இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் எல்லா நாளிலும் - அதன் ஒவ்வொரு நொடியிலும் அவர் நினைவின்றி நம் இயக்கமில்லை.

உயிர்நிகர் தலைவர் கலைஞர் நம்மிடையே உலவவில்லை என்றாலும், உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும் அவர் நமக்கு ஊட்டிய உணர்வு நம் குருதியோட்டத்தில் கொள்கையோட்டமாக இருக்கிறது. அவர் காட்டிய பாதை -அவர் அளித்த பயிற்சி - அதனால் அமைந்திருப்பதும் அவரது ஆட்சி என்பதை நெஞ்சத்தில் நிலைநிறுத்திக் கொண்டுதான் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ஆகிய நான் முதல்வர் பொறுப்பினை ஏற்றேன்.

‘சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்’ எனத் தலைவர் கலைஞர் அவர்கள் வகுத்தளித்த நெறியின்படி, மாநிலத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் - பேரிடர் சூழலிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு அரணாக இருந்து, தி.மு.கழகம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை தலையாய கடமையாகக் கொண்டு செயலாற்றுகிறேன். நெஞ்சில் நிறைந்துள்ள தலைவர் கருணாநிதியிடம் அதற்கான வழியினைக் கற்றிருக்கிறேன். அவரிடமிருந்து அதற்கான வலிமையையும் பெற்றிருக்கிறேன்.  உடன்பிறப்புகளாம் உங்களின் துணையுடனும் - தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடனும் தலைவர் கருணாநிதி வழியில் கழக அரசின் பயணம் தொடரும் என்பதை அவரது மூன்றாம் ஆண்டு புகழ்வணக்க நேரத்தில் உறுதிமொழிகிறேன்.

உடன்பிறப்புகளாகிய உங்களின் ஒத்துழைப்பே இந்தப் பயணத்திற்கு வலு சேர்க்கும். கருணாநிதிக்கு புகழ் சேர்க்கும்.

கரோனா கால நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு - அவற்றை முறையாகக் கடைப்பிடித்து - ஆகஸ்ட் 7 அன்று அவரவர் இல்லத்தின் வாசலில் தலைவர் கருணாநிதியின் படத்தினை வைத்து - மாலையிட்டு - மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்திட வேண்டுகிறேன்.  பெரு விழாக்கள் வேண்டாம். அலங்காரங்கள் - ஒலிபெருக்கிகளைத் தவிர்த்திடுவீர். நம் நெஞ்சங்களிலும் நினைவுகளிலும் நிரந்தரமாக இருந்து, நாட்டை வழிநடத்தும் கருணாநிதிக்கு வீடுகள்தோறும் மரியாதை செலுத்திடுவோம். அவர் வகுத்த பாதையில் பயணித்து தமிழ்நாட்டை மாண்புறச் செய்திடுவோம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com