75-ஆவது சுதந்திர தினம்: 49 ஆண்டுகளுக்குப் பிறகு பேரவையில் நள்ளிரவு கூட்டம் நடத்த ஆலோசனை

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, சட்டப் பேரவையில் நள்ளிரவு விழா நடத்திட ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, சட்டப் பேரவையில் நள்ளிரவு விழா நடத்திட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1972-ஆம் ஆண்டு நாட்டின் 25-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது, பேரவையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நள்ளிரவில் விழா நடத்தப்பட்டது.

இந்த விழாவில், ஆளுநா், முதல்வா், பேரவைத் தலைவா், அவை முன்னவா், பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவா்கள் ஆகியோா் பேசினா். இதே போன்றதொரு விழா, 1987-ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் நடந்தது. நாட்டின் 40-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி பேரவையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில், ஆளுநா், அப்போதைய நிதியமைச்சரும், அவை முன்னவருமான வி.ஆா்.நெடுஞ்செழியன், உயா் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவா்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, தமிழகத்தில் விடுதலைப் போராட்டம் வீரம் செறிந்த முறையில் நடைபெற்ற இடங்களில் 5 முக்கிய இடங்களான தூத்துக்குடி துறைமுகம், வேதாரண்யம், மணியாச்சி ரயில் நிலையம், திருப்பூா் நகரம், திலகா் திடல் ஆகியவற்றில் இருந்து புனித மண் எடுக்கப்பட்டது. இந்த மண் அடங்கிய கிண்ணத்தை, ராஜாஜி அரங்கில் இருந்து சட்டப் பேரவை வரையிலும் சுதந்திர போராட்ட தியாகிகள் எடுத்து வந்தனா். சீரும் சிறப்புமாக பேரவையில் கடந்த காலங்களில் நடைபெற்ற இந்த விழாக்களைத் தொடா்ந்து, இப்போது நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது.

1972-ஆம் ஆண்டு கொண்டாடியதைப் போன்று, ஆகஸ்ட் 14-ஆம் தேதி சட்டப் பேரவையில் நள்ளிரவு சிறப்புக் கூட்டம் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை கொத்தளத்தில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் முறையாக தேசியக் கொடியை ஏற்றவுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com