வார இறுதி நாள்களில் வழிபாட்டுத்தலங்களில் தரிசனம் ரத்து

வார இறுதி நாள்களில் மத வழிபாட்டுத்தலங்களில் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  
வார இறுதி நாள்களில் வழிபாட்டுத்தலங்களில் தரிசனம் ரத்து

வார இறுதி நாள்களில் மத வழிபாட்டுத்தலங்களில் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று பரவலின் தன்மை அதன் தாக்கம் குறித்து முதல்வர் தலைமையில் இன்று (6-8-2021) தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வாரியான நோய்ப் பரவல், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயலாக்கம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவினரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு 9-8-2021 அன்று காலை 6.00 மணியுடன் முடிவடையவுள்ள நிலையில், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் நோய்த் தொற்று பரவல்; அண்டை மாநிலங்களில் நோயின் தாக்கம் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அரசு உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதன் அடிப்படையில், நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது. இக்கட்டுப்பாடுகளுடன் 23-8-2021 காலை 6.00 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
கடந்த வாரத்தில் கூட்டம் அதிகமாக கூடக்கூடிய நிகழ்வுகள் மற்றும் சந்தைப் பகுதிகளில் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் / காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் நோய்த் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது. முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட மாநிலம் தழுவிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொது மக்களிடையே கரோனா நொய்த் தொற்று தொடர்பான விழிப்புணர்வினை அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com