நைனாமலை கோயிலுக்கு தொடர்ந்து 100 வாரம் மலையேறி இளைஞர் சாதனை

ராசிபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் 3700 படிகள் கொண்ட நைனாமலை கோயிலுக்கு தொடர்ந்து 100-வது வாரமாக மலை ஏறி சாதனை புரிந்துள்ளார். 
நைனாமலை கோயிலுக்கு தொடர்ந்து 100 வாரம் மலையேறி இளைஞர் சாதனை
நைனாமலை கோயிலுக்கு தொடர்ந்து 100 வாரம் மலையேறி இளைஞர் சாதனை


ராசிபுரம்: ராசிபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் 3700 படிகள் கொண்ட நைனாமலை கோயிலுக்கு தொடர்ந்து 100-வது வாரமாக மலை ஏறி சாதனை புரிந்துள்ளார். 

நாமக்கல் மாவட்டத்தில் புதன்சந்தை அருகேயுள்ளது நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில். கொங்கு வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோயில் மலை மீது சுமார் 2700 அடி உயரத்தில் உள்ளது. மலைக்கோவிலில் குவலவள்ளி தாயாருடன் காட்சியளிக்கும் நைனாமலை வரதராஜ பெருமாளை தரிசிக்க கரடுமுரடான கடினமான மலைபாதை படிக்கட்டுகளை கடந்துதான் செல்ல வேண்டும். 

இக்கோவிலுக்கு புரட்டாசி மாதங்களிலும், சனிக்கிழமைகளில் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும்.

இளைஞர் சாதனை: இந்நிலையில் ராசிபுரம் காட்டூர் பகுதியை சேர்ந்த எல்.சிவக்குமார் (48), என்பவர் கடினமான இந்த மலைப்பாதையை தொடர்ந்து சனிக்கிழமை தோறும் 100-வது வாரமாக சென்று வந்து சாதனை புரிந்துள்ளார்.  

இவர் ராசிபுரம் பகுதியில் ஒட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். மேலும் ரோட்டரி சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பங்கேற்று பொதுநல சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்கிள் பயிற்சி, மலை ஏறும் பயிற்சி போன்ற உடல் நல பயிற்சியில் ஆர்வம் கொண்ட இவர்,  சில இளைஞர்களுடன் தொடர்ந்து மலை ஏறும் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். 

உடல் நலன் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான அவரது முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு  தெரிவித்துள்ளனர். வழக்கமாக சுமார் 5 மணி நேரத்தில் மலைக்குச் சென்று வர முடியும் என்ற நிலையில், சுமார் 3 கி.மீ. தொலைவில், 3700 படிகட்டுகளுடன், 2600 அடி உயரத்தில் உள்ள இந்த மலையை அவர் 2 அரை மணி நேரத்தில் ஏறி வரதராஜ பெருமாளை வழிபட்டு இறங்கிவிடுகிறார். 

இவருடன் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த டி.ரமேஷ், கதிர் என்ற இளைஞர்கள் சிலரும் பல வாரங்களாக மலை ஏறிச் சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  இந்த வாரம் சனிக்கிழமை 100-வது வாரமாக இவர்கள் மலை ஏறி இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பாராட்டு
100-வது வாரமாக மலை ஏறி இறங்கிய எல்.சிவக்குமார் உள்ளிட்ட இளைஞர்களை, ராசிபுரம் ரோட்டரி சங்கத்தினர் வரவேற்று பாராட்டி கெளரவித்தனர். மாவட்ட ரோட்டரி சங்க ஆளுநர் (2022-23) பி.சரவணன், நாமக்கல் பவுல்டரி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் என். திருவள்ளுவன், ரோட்டரி மண்டல உதவி ஆளுநர் கே.குணசேகர், முன்னாள் உதவி ஆளுநர் எஸ்.பாலாஜி, ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.அன்பழகன், செயலர் இ.என்.சுரேந்திரன், முன்னாள் தலைவர்கள் ஆர்.ரவி, எஸ்.கதிரேசன், ஆர்.சிட்டிவரதராஜன், கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com