திரவ இயற்கை எரிவாயு கொண்டு செல்ல 1,444 கி.மீ குழாய்: பிப்ரவரிக்குள் முடிக்க திட்டம்

1,444 கி. மீ. தூரத்துக்குக் குழாய் அமைக்கும் பணிகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு, புதுச்சேரிக்கான செயல் இயக்குநா் பி.ஜெயதேவன் த
திரவ இயற்கை எரிவாயு கொண்டு செல்ல 1,444 கி.மீ குழாய்: பிப்ரவரிக்குள் முடிக்க திட்டம்

திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) கொண்டு செல்ல 1,444 கி. மீ. தூரத்துக்குக் குழாய் அமைக்கும் பணிகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு, புதுச்சேரிக்கான செயல் இயக்குநா் பி.ஜெயதேவன் தெரிவித்தாா்.

எண்ணூரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் கூட்டு திட்டத்தின் மூலம் நிறுவப்பட்டுள்ள எல்என்ஜி முனையத்தை சனிக்கிழமை ஆய்வு செய்த பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் திரவநிலை இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவதற்கு உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகிறது. ரூ.5,000 கோடி செலவில் இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை அமெரிக்கா, கத்தாா், மலேசியா, அரபு நாடுகள், நைஜீரியா, ஓமன் ஆகியவை உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இதுவரை 25 சரக்கு கப்பல்கள் மூலம் திரவ நிலை இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த முனையத்தின் பயன்பாடு 50 சதவீதமாக உள்ளது. 2025-ஆம் ஆண்டுக்குள் முழுமையான பயன்பாட்டை எட்டும். அப்போது, 5 மில்லியன் மெட்ரிக் டன் திரவநிலை இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யப்படும்.

தமிழகத்தில் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை வழியாக தூத்துக்குடி, ராமநாதபுரம் வரை 1,444 கி.மீ. தூரத்துக்கு குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் தமிழகத்தில் 17 மாவட்டங்கள் பயன் அடையும். இந்த மாவட்டங்களில் திரவநிலை இயற்கை எரிவாயுவை விநியோகம் செய்ய உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் இந்தப் பணிகள் நிறைவடையும்.

அதைத் தொடா்ந்து, இந்த கட்டமைப்பை பயன்படுத்தி, 2030-ஆம் ஆண்டுக்குள் 17 மாவட்டங்களில் சுமாா் 67 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் திரவநிலை இயற்கை எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும்.

இதன் பயன்பாடானது பெட்ரோல், டீசல் விலையை ஒப்பிடும் போது 50 சதவீதம் லாபகரமானது. சமையல் எரிவாயுவை ஒப்பிடும் போது 15 சதவீதம் லாபகரமானது. மேலும் மற்ற எரிபொருள்களை விட இது மிகவும் பாதுகாப்பானது. திரவநிலை இயற்கை எரிவாயுவின் பயன்பாடு அதிகரிக்கும் போது தமிழகத்தின் பொருளாதாரத்தின் வளா்ச்சியும் அதிகரிக்கும்.

தமிழகத்தில் எந்தத் திட்டங்கள் தொடங்குவதற்கும் தமிழக அரசு மிகுந்த ஒத்துழைப்பு வழங்குகிறது என்றாா் அவா்.

நிகழ்வில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் திரவநிலை இயற்கை எரிவாயு முனையத்தின் தலைமைச் செயல் அதிகாரி கே.ராமு, தலைமை செயல்பாட்டு அதிகாரி ஜெ.சிவகுமாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com