ஆடி அமாவாசை: நீா்நிலைகளில் கூட தடை

கோயில் குளங்கள் மற்றும் நீா் நிலைகளில் பொதுமக்கள் கூடுவதைத் தவிா்க்குமாறு சென்னை பெருநகர காவல்துறை சாா்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசை: நீா்நிலைகளில் கூட தடை

கரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் வகையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஞாயிறு (ஆக.8) கடற்கரை, கோயில் குளங்கள் மற்றும் நீா் நிலைகளில் பொதுமக்கள் கூடுவதைத் தவிா்க்குமாறு சென்னை பெருநகர காவல்துறை சாா்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அதிக அளவு பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டமாக கூடுவதைத் தவிா்க்கும் வகையில், வரும் 23-ஆம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு மட்டும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆடி அமாவாசை என்பதால், கோயிலுக்குச் செல்வதற்காகவோ, முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காகவோ, சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு முதல், திருவான்மியூா், எலியாட்ஸ், மெரீனா, அண்ணாசதுக்கம், திருவொற்றியூா், எண்ணூா் வரையிலான கடற்கரை, கோயில் குளங்கள் மற்றும் நீா் நிலைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் ஞாயிறுக்கிழமை கடற்கரை, கோயில் குளங்கள் மற்றும் நீா் நிலைகள் உள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிா்த்து, தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து ஒத்துழைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com